

புதிய வாக்காளர் சேர்ப்புக்கு தகுதி நாளான ஜனவரி 1-ம் தேதி காலக்கெடுவை நீக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, டெல்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு 18 வயதை எட்டும் இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய ஓராண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக ஒருவர் ஜனவரி 2-ம் தேதி 18 வயதை எட்டினால் அவர் வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்ய முடியாது. ஓராண்டு காத்திருக்க வேண்டும். ஒருவேளை தேர்தல் நடைபெறுமானால் அவர்கள் மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, ஒருவர் 18 வயதை எட்டிய நாள் அன்றே அவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதுதொடர்பாக இப்போதுள்ள விதிகளை திருத்துமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்றார்.