

உ.பி. 2-வது கட்டத் தேர்தலில், 6 தேசிய மற்றும் 6 மாநில கட்சிகள் உட்பட 92 கட்சிகள் மற்றும் 206 சுயேச்சைகள் உள்ளிட்ட மொத்தம் 721 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 69 பேர் பெண்கள். இவர்களின் பிரமாண பத்திரங்களை உ.பி. தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகியவை இணைந்து ஆய்வு செய்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
719 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில், 107 பேர் (15%) தங்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் இருப்பதாக 84 (12%) பேர் தெரிவித்துள்ளனர்.
குற்ற வழக்குகள் உள்ளவர் களில் 16 பேர் பாஜகவையும், 25 பேர் பகுஜன் சமாஜ் கட்சியையும், 21 பேர் சமாஜ்வாதி கட்சியையும், 6 பேர் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் தங்களுக்க ரூ.1 கோடிக் கும் மேல் சொத்து இருப்பதாக 256 பேர் தெரிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 58 பேர் பகுஜன் சமாஜ் கட்சியையும், 50 பேர் பாஜகவையும், 45 பேர் சமாஜ் வாதி கட்சியையும், 13 பேர் காங் கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்கள்.
கல்வித் தகுதியைப் பொறுத்த வரை 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் 277 பேர் என்றும் பட்டப் படிப்புக்கு மேல் படித்தவர்கள் 310 பேர் என்றும் 11 பேர் படிப்பறிவில்லாதவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.