Published : 22 Dec 2013 02:18 PM
Last Updated : 22 Dec 2013 02:18 PM

டெல்லியில் அரசு அமைக்கப்படுமா? இன்று முடிவை அறிவிக்கிறது ஆம் ஆத்மி கட்சி

டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பான இறுதி முடிவை இன்று (திங்கள்கிழமை) அறிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து இக் கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இன்று பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பொது மக்களை சந்திக்கிறேன். எனது தொகுதியிலும் 4 இடங்களில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மக்களின் கருத்துகளை அறிந்த பிறகு திங்கள்கிழமை எங்கள் முடிவை அறிவிப்போம்.

நம் நாட்டில் இதுபோல் மக்கள் கருத்தை அறிவது இதுவே முதல்முறை. நாட்டில் அரசு அமைப்பதில் சாதாரண மக்களின் பங்கு தற்போது வாக்களிப்பதுடன் முடிந்து விடுகிறது. ஆனால் நாங்கள் மக்களை தேடிச் செல்கிறோம். அவர்கள் தங்களை அதிகாரம் மிக்கவர்களாக உணரச் செய்கிறோம். டெல்லி மக்கள் இன்று எங்களைப் பற்றிதான் பேசுகின்றனர். இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார் கேஜ்ரிவால்.

பெரும்பான்மை இல்லை:

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 31 இடங்களுடன் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ.க. ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. இதையடுத்து 28 இடங்களை கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைக்க வருமாறு டெல்லி துணை நிலை ஆளுநர் அழைத்தார். ஆனால் இதற்கு கால அவகாசம் அளிக்குமாறு இக்கட்சி கோரியது. தேர்தலில் 8 தொகுதிகளை மட்டும் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மிக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

தயக்கமா?

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் சாத்தியம் இல்லாததால், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கத் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அர்விந்த் கேஜ்ரிவால் மறுத்தார்.

“நீண்ட விவாதம் மற்றும் ஆலோசனைக்குப் பிறகே தேர்தல் அறிக்கையை தயாரித்தோம். அதில் உறுதியளித்த அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம். மேலும் டெல்லி மக்கள் எங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வோம்” என்றார் கேஜ்ரிவால்.

லோக்பால் நிறைவேறும்:

“லோக்பால் மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றுவோம் என கூறியிருந்தோம். தற்போது ஆட்சி அமைப்பதாக முடிவு எடுக்கப் படுமானால், இம்மசோதாவை நிறைவேற்ற மேலும் ஒரு வாரம் ஆகும். ஆனால் கண்டிப்பாக இந்த மசோதா நிறைவேற்றப்படும்” என்றார் கேஜ்ரிவால்.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது, “ஆம் ஆத்மி ஆட்சிக்கு வருமானால் ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 29ம் தேதி சட்டமன்ற கூட்டத்தை கூட்டி ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம்” என கேஜ்ரிவால் கூறியிருந்தார். ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய அளவிலான பொதுக்கூட்டம் மற்றும் உண்ணாவிரதம் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

80% ஆதரவு:

அர்விந்த் கேஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், “128 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியமைக்க 110 இடங்களில் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 80 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். என்றாலும் கட்சியின் அரசியல் விவகாரக் குழு ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். திங்கள்கிழமை பகல் 12.30 மணிக்கு நான் ஆளுநரை சந்தித்து எங்கள் முடிவை தெரிவிப்பேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x