நெடுவாசல் குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்ற தமிழக அரசிடம் ‘ஜெம்’ நிறுவனம் கோரிக்கை

நெடுவாசல் குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்ற தமிழக அரசிடம் ‘ஜெம்’ நிறுவனம் கோரிக்கை
Updated on
1 min read

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திடம் (ஓஎன்ஜிசி) உள்ள மீத்தேன் துரப்பன குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு தமிழக அரசிடம் ஜெம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது அங்கு மீத்தேன் எடுப்பதற்கான முன்னேற்ற நடவடிக்கையாக அந்நிறுவனம் கருதுகிறது.

நாடு முழுவதிலும் 31 இடங்களில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்கள் எடுக்க 28 நிறுவனங்களிடம் மத்திய அரசு கடந்த மார்ச் 27-ம் தேதி ஒப்பந்தம் செய்தது. இவற்றில் தமிழகத்தின் நெடுவாசல், புதுச்சேரியின் காரைக்கால் ஆகியவையும் அடங்கும். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் லேபராட்டரீஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை தொடந்து கனிமவளச் சுரங்கக் குத்தகை, மாசுக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் அனுமதி என 30 வகையான ஒப்புதலை மத்திய, மாநில அரசுகளிடம் அந்நிறுவனம் பெறவேண்டும். இதன்படி நெடுவாசல் குத்தகையை ஓஎன்ஜிசியிடம் இருந்து தங்கள் பெயருக்கு மாற்றித்தர ஜெம் நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஜெம் லேபராட்டரீஸ் முதுநிலை அதிகாரியும் செய்தித் தொடர்பாளருமான ஹரிபிரசாத் கூறும்போது, “குத்தகையை எங்கள் பெயருக்கு மாற்றுவதில் தமிழக அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறையுடனான கடிதப் போக்குவரத்து மீத்தேன் எடுப்பதன் முன்னேற்ற நடவடிக்கையாகக் கருதுகிறோம். இதற்கான அனுமதி எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை. என்றாலும் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளோம். குத்தகை மாற்றப்பட்ட பிறகே நாங்கள் சட்டப்படி அங்கு செல்ல முடியும். இதற்கு முன் எங்கள் அதிகாரிகள் அங்கு விரட்டியடிக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறானது” என்றார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறைக்கு ஜெம் நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது. இதில் சில கூடுதல் விளக்கங்களை கனிமவளத் துறை கேட்டது. இதற்கான பதிலும் ஜெம் நிறுவனம் சார்பில் சில தினங்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் குத்தகை மாற்றித் தரப்படும் என ஜெம் நிறுவனம் நம்புகிறது. இதன் பிறகு நெடுவாசல் மக்களின் அச்சத்தை போக்கும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கவுள்ளது.

இதுகுறித்து ஹரிபிரசாத் மேலும் கூறும்போது, “சுமார் 3000 மீட்டர் ஆழத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் எடுப்பதால் நிலப்பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது நிலத்தடி நீர் உட்பட எதிலும் கலந்து விடவும் வாய்ப்பில்லை. நெடுவாசலில் விழிப்புணர்வு முகாம் நடத்தி மக்களின் அனைத்து அச்சங்களும் போக்கப்படும். இப்பணியில் மத்திய அரசும் எங்களுக்கு உதவ உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in