

மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார், விவசாயிகளை காப்பாற்றாமல், கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக, பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி சாடினார்.
மகாராஷ்டிரம் மாநிலத்தின் அமராவதியில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசும்போது, ''இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார். ஆயினும், அவரால் இந்த மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை. கிரிக்கெட் பற்றி பேசுவதற்கு மட்டுமே அவருக்கு நேரமுள்ளது. விவசாயிகளை காப்பாற்ற நேரமில்லை.
மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மத்தியில் மட்டுமின்றி, மாநிலத்திலும் தேசியவாத காங்கிரஸ் இல்லாத அரசு அமைய வேண்டும்" என்றார் மோடி
குஜராத் மிகுந்த வளர்ச்சியடைந்த மாநிலம் என்று சோனியா காந்தியை தலைவராகக் கொண்ட ராஜீவ் காந்தி பவுன்டேஷன் கூறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், "தனது தாயாரின் தலைமையிலான நிறுவனத்தின் கருத்துக்கு மாறாக ராகுல் காந்தி பேசி வருகிறார்" என்றார்.
மேலும், "எங்கள் இதயங்களில் நிரம்பியுள்ள பால் தாக்கரேவின், காங்கிரஸ் இல்லாத மகாராஷ்டிரம், இந்தியா உருவாக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவோம்" என்றார் மோடி.