

கேரளாவைத் தொடர்ந்து, கொல்கத்தாவிலும் 'காதல் முத்தப் போராட்டம்' நடைபெறும் என்று மாணவர் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற 'காதல் முத்தப் போராட்டம்' வேறு மாநிலங்களிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. நாட்டின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகமான கொல்கத்தாவின் ஜதாவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர்களுள் ஒருவரான நபோடமா பால் கூறும்போது, "கலாச்சாரத்தை பாதுகாப்பதாக கூறும் இயக்கங்களுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். இதில் ஆர்வம் உள்ள மக்கள் அனைவரும் வந்து கலந்துக்கொள்ளலாம்.
இந்தக் கலாச்சார காவலர்கள் நமது நாட்டில் அரிதாக காணப்படுவதாக நினைக்க வேண்டாம். காவி அலை மெதுவாக பரவி நாட்டையே சூழ்ந்துகொண்டு வருகிறது. அவர்கள் ஒரு மதத்தில் இருப்பவர்கள் வேறுபட்ட மதத்தை திருமணம் செய்துகொள்வதை 'லவ் ஜிகாத்' என்று குற்றம்சாட்டி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பதை அனைவரும் விரைவில் உணர வேண்டும்.
எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து வளாகத்திலிருந்து முத்தமிடுவது, கட்டி அணைப்பது, அன்பை வெளிப்படுத்துவது போல எங்களுக்கு எந்த வகையில் பிடிக்கிறதோ, அந்த வகையில் எங்கள் முத்தப் போராட்டத்தை நடத்துவோம்.
இதனை அடுத்து நாங்கள் அனைவரும், பல்கலைக்கழகத்துக்கு எதிரே உள்ள பேருந்து நிலையத்திலிருந்து 8B பேருந்தில் ஏறி ஆங்காங்கே இறங்கி நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் கலாச்சார பாதுகாவலர்கள் பற்றியும், நாங்கள் ஏன் அவர்களை எதிர்க்கிறோம் என்பதையும் பொது மக்களுக்கு விளக்குவோம்.
அப்போது, நாங்கள் சமீபத்தில் கொல்கத்தா திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் முழங்கால் அளவு பாவாடை அணிந்து வந்ததை அநாகரீக செயல் என்று குறிப்பிட்டு, அதற்கு தண்டனை தருவதாக அந்தப் பெண்ணிடம் அத்துமீறலில் நடந்துகொண்டது போன்ற சம்பவங்களின் உண்மை நிலவரத்தை எடுத்து கூறுவோம்" என்றார்.
இதே போல கொல்கத்தா மாநிலப் பல்கலைக்கழக மாணவர்களும் முத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
முன்னதாக, கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள காபி ஷாப் ஒன்றில் காதலர்கள் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் அநாகரீகமாக நடந்து கலாச்சாரத்தை மீறுவதாக கூறி, பாஜக இளைஞர் அணியினர் அந்த ஷாப்பை தாக்கி கடுமையாக சேதப்படுத்தினர். இவை சி.சி.டி.வி.யில் பதிவான நிலையில், பாஜக கொடியுடன் சிலர்கள் கடையை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்கள் தீவிரமாக பரவியது.
இதைக் கண்டித்து சுதந்திர சிந்தனையாளர்கள் (Free Thinkers) என்ற ஃபேஸ்புக் வலைதளத்தில் இயங்கும் ஆர்வலர்கள் அமைப்பு கொச்சி மரைன் டிரைவ் என்ற போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 'காதல் முத்தம்' என்ற பெயரில் முத்தமிடும் போராட்டமாக நடத்தினர். இதில் வயது வரம்பையும் பாலின பாகுபாடையும் தாண்டி பலர் கலர்ந்துகொண்டனர். அப்போது காதல் முத்த போராட்டக்காரர்கள் மீது பாஜக இளைஞர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து போலீஸார் பதற்றத்தை தடுக்க மாணவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆனால் கைது நடவடிக்கையையும் மீறி இந்த போராட்டம் காவல்துறை வாகனத்திலும் காவல் நிலையத்திலும் தொடர்ந்தது.
இவர்களுக்கு சமூக வலைதளங்களிலும் பொது உடைமையாளார்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீப காலமாக கலாச்சாரத்தை மீறி நடப்பதாக இளைஞர்கள் மீது பல மாநிலங்களிலும் பரவலாக தாக்குதல் நடத்தப்படுகிறது. தற்போது கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் போலீஸ் உடையில்லாத காவல்துறையாக செயல்பட்டு அத்துமீறும் இயக்கங்களுக்கு எதிராக இந்த நூதன முத்த போராட்டம் நடத்தப்படுவதாக கொச்சியை சேர்ந்த மாணவர்கள் குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக இந்த போராட்டம் திங்கட்கிழமை ஹதராபாத்திலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.