

நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்றவுடன் பலருக்கும் பலவிதமான அனுமானங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால், யாரும் எதிர்பார்த்திராத ரூ.500, 1000 செல்லாது என்ற நோட்டு நடவடிக்கையை அவர் வெளியிட்டார். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என விவரிக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை 10 நாட்களாக மத்திய அரசு அவ்வப்போது வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள், நாடு முழுவதும் மக்கள் சந்தித்த இன்னல்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அமளிகள் குறித்த தொகுப்பு.
1. நாடு முழுவதும் சனிக்கிழமை வழக்கமான வேலை நேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும். இந்த நாளில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படும். வேறு யாருக்கும் பழைய நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படாது. வரும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும்.
2. "ரூ.500, 1000 நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுதும் கீழ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் தொடரப்படும் மனுக்களை தடை செய்ய முடியாது என்று மத்திய அரசிடம் திட்டவட்டமாக கூறிய உச்ச நீதிமன்றம், “இந்த அளவுக்கு பிரச்சினைகள் எழுந்திருக்கும்போது நாங்கள் எப்படி கதவுகளை அடைக்க முடியும்? மக்கள் பணத்திற்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரங்களும் உருவாகலாம்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
3. வங்கிகளில் பழைய நோட்டுக்கு ரூ.4,500 மாற்றிக் கொள்ளலாம் இருந்ததை இனி பழைய நோட்டுக்கு ரூ.2000 மட்டுமே மாற்றலாம் என குறைத்தது மத்திய அரசு. எல்லோருக்கும் நோட்டு மாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தது.
4. ஏடிஎம் மையங்களில் எடுத்துக் கொள்ளும் பணத்தின் அளவு 2,000-ல் இருந்து 2,500 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால், இந்த சலுகையை புதிய நோட்டுகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட ஏடிஎம் மையங்களில் மட்டுமே பெற முடியும்.
5. வங்கிகளிடம் பெற்ற பயிர்க்கடனில் இருந்து விவசாயிகள் வாரம் ரூ.25,000 எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (ஏபிஎம்சி) பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் வாரத்துக்கு ரூ.50,000 பணம் வங்கியில் இருந்து எடுக்க அனுமதிக்கப்பட்டது. கூலித் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுப்பதற்கு ஏதுவாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (ஏபிஎம்சி) பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை கொள்முதல் செய்வோர் செலுத்தும் தொகையிலிருந்து வாரத்துக்கு ரூ.25,000 வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. பயிர்க்கடனுக்கான ப்ரீமியம் தொகையை செலுத்த விவசாயிகளுக்கு 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது.
6. பழைய நோட்டுகளை மாற்ற ஒரே நபர் மீண்டும் மீண்டும் வங்கிகளில் வந்து வரிசையில் நிற்பதை தவிர்க்க வலது கை சுண்டு விரலில் எளிதில் அழியாதை மை வைக்கும் நடைமுறை பெருநகரங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
7. இதனையடுத்து, வங்கிகளில் பணம் மாற்ற வாடிக்கையாளர்களின் விரலில் அழியாத மை வைப்பதால் தேர்தலில் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
8. பேருந்து, ரயில், விமான டிக்கெட் முன்பதிவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்தது.
9. நோட்டு உத்தியை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் இருஅவைகளும் கடந்த இரண்டு நாட்களாக முடங்கின. வங்கி, ஏடிஎம் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களை உரி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக குலாம் நபி ஆசாத் மன்னிப்பு கேட்குமாறு பாஜக வலியுறுத்தி வருகிறது.
10. நோட்டு உத்தி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாடு முழுவதும் பண பறிமுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.