

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்று உளவுத் துறை எச்சரித்திருப்பதால் அங்குள்ள விமானப் படைத் தளத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பதான்கோட் விமானப் படைத் தளத்துக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள், 7 வீரர்களைச் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பதான்கோட்டில் தீவிரவாதிகள் மீண்டும் ஊடுருவியிருக்கக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பதான்கோட் முழுவதும் மாநில போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விமானப் படைத் தளத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமானப் படை வட்டாரங்கள் கூறியபோது, போர் விமானங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. உள்ளூர் போலீஸார், ராணுவத்தின் அதிரடிப்படை உள்ளிட்டோருடன் இணைந்து பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளோம். வான் பரப்பு மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்தன.