Last Updated : 30 May, 2017 12:59 PM

 

Published : 30 May 2017 12:59 PM
Last Updated : 30 May 2017 12:59 PM

உ.பி.யில் மதுபான விடுதியை தொடங்கி வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை

உத்தரப் பிரதேசத்தில் மதுபான விடுதியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுவாதி சிங் திறந்து வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படம் கடுமையான விமர்சனங்களுடன் சமூக வலைதளைங்களில் சுற்றி வருகிறது.

உ.பி.யில் முதல் அமைச்சர் யோகி அதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு புதிதாகப் பதவி ஏற்றுள்ளது. அம்மாநிலத்தில் யோகியால் போடப்படும் அதிரடி உத்தரவுகளால் நாடு முழுவதிலும் உ.பி விவாதப் பொருளாகியுள்ளது.

வழக்கமாக எல்லா சர்ச்சைகளும் யோகியின் உத்தரவுகள் சார்ந்து இருக்கும். இந்நிலையில், இப்போது சற்று மாறாக உ.பி.யின் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்வாதி சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதற்கு அவர், கடந்த சனிக்கிழமை தலைநகரான லக்னோவில் ஒரு தனியார் நிறுவனத்தின் மதுபான விடுதியை திறந்து வைத்தது காரணம்.

இது குறித்து உபி மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான அகிலேஷ்சிங் 'தி இந்து'விடம் கூறுகையில், "மாநிலம் முழுவதிலும் உள்ள பெண்கள் மதுக்கடைகளை மூடக்கோரி வருகின்றனர். ஆனால், புதிதாக மதுபான விடுதியை திறக்க உ.பி அமைச்சர் நேரில் செல்கிறார். இது உ.பி.யில் மதுவுக்கு ஆதரவளிக்கும் பாஜக அரசின் செயல்பாடுகளை காட்டுகிறது. இதைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும்" எனத் தெரிவித்தார்.

இந்த துவக்க விழாவுக்கு ஸ்வாதி சிங்குடன் அவரது கணவர் தயா சங்கர் சிங்கும் அழைக்கப்பட்டிருந்தார். இவர் மாயாவதி மீது தனிப்பட்ட விமர்சனம் செய்தமையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இதனால், அவரை மாநில துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பாஜக, தேர்தலுக்கு பின் மீண்டும் சேர்த்தது. எனினும், தன் கணவருக்கு பதிலாக தேர்தலில் போட்டியிட்ட ஸ்வாதி சிங் பெற்ற வெற்றியால் அமைச்சராக்கப்பட்டார்.

இதுபோல், உ.பி.,யில் எந்த கட்சியின் அமைச்சரும் மதுபான விடுதிகளைத் திறந்து வைத்ததாக முன் உதாரணமும் இல்லை எனக் கருதப்படுகிறது. மேலும், அமைச்சர் திறந்து வைத்த மதுபான விடுதிக்கும் முறையான அரசு உரிமமும் இல்லை எனக் கூறப்படுகிறது.

அமைச்சர் ஒருவர் மதுபான விடுதியை திறந்து வைத்ததை சமாஜ்வாதி கட்சியும் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 'மது அருந்துவதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?' என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் முதல் அமைச்சருக்கு உடன்பாடு இல்லை எனில் அந்த பெண் அமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதில் கேட்ட செய்தியாளர்களிடம், பாஜகவின் உ.பி. மாநில செய்தி தொடர்பாளர் ஷலாப் மணி திரிபாதி கூறுகையில், "இந்த சம்பவம் எனது கவனத்திற்கு வரவில்லை. அப்படி சென்றிருந்தால் அது அவரது தனிப்பட்ட நிலையாக இருக்கும். ஆனால், அந்த விழாவுக்கு சென்றது தொடர்பாக அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, உ.பி.,யின் இரு ஐபிஎஸ் அதிகாரிகளும் ஸ்வாதியுடன் கலந்து கொண்டதால் சிக்கலுக்குள்ளாகி உள்ளனர். தன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பணியை விடுத்து ஸ்வாதி சிங்குடன் கலந்து கொண்டதற்கு விளக்கம் கேட்டு இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களது ஐ.ஜி.,யான ஜே.என்.சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தம்பதிகளான அவ்விரு அதிகாரிகளில் கணவர் கவுரவ் சிங் ரேபரேலியிலும், மனைவியான நேஹா பாண்டே உனாவிலும் பணியாற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x