பிஹார் முதல்வர் பதவியில் இருந்து ஜிதன் ராம் மாஞ்சி விரைவில் நீக்கம்?

பிஹார் முதல்வர் பதவியில் இருந்து ஜிதன் ராம் மாஞ்சி விரைவில் நீக்கம்?
Updated on
1 min read

பிஹார் முதல்வராக பொறுப்பு வகிக்கும் ஜிதன் ராம் மாஞ்சி, விரைவில் அப்பதவி யிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய ஜனதா தளக் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி செய்தியாளர் களிடம் நேற்று முன்தினம் கூறும்போது, “என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதற்கு, கட்சியில் எனக்கு எதிராக செயல்படும் சிலர் முயற்சிக்கின்றனர். நவம்பர் மாத இறுதிவரையில் பதவியில் நீடிப்பேனா என்பதே சந்தேகம்தான்” என்றார்.

ஜிதன் ராம் மாஞ்சி இவ்வாறு கூறியதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், கட்சியின் மூத்த தலைவர்களுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக பிஹார் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, “இதைப் பற்றி இப்போது கருத்து எதையும் தெரிவிக்க விரும்ப வில்லை. மக்களை சந்தித்து உரையாடும் யாத்திரையை வரும் 29-ம் தேதி நிறைவு செய்கிறேன். அதன் பிறகுதான், இந்த விவகாரம் பற்றி கருத்துத் தெரிவிப்பேன்” என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஒருவர் கூறும்போது, “நிதிஷ் குமாருக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலர், அவரிடம் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி குறித்து குறை கூறி யுள்ளனர். சமீபகாலமாக ஜிதன் ராம் மாஞ்சி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். எனவே, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அந்த அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜிதன் ராம் மாஞ்சியை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக மீண்டும் நிதிஷ் குமாரை முதல்வராக்க அந்த அமைச்சர்கள் விரும்பு கின்றனர்” என்றார்.

சர்ச்சை பேச்சு

முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி அண்மைக் காலமாக, “பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிப்பேன். எதிர்காலத்தில் நான் பிரதமராவேன். உயர் ஜாதி பிரிவினர் அனைவரும் வெளிநாட்டினர்; எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் மண்ணின் மைந்தர்கள்” என பல சர்ச்சைக் குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று ஜிதின் ராமுக்கு கட்சியின் தலைமை அறிவுறுத்தியது. ஆனால், அதைப் பொருட்படுத்தாத ஜிதன் ராம், “யாருக்கும் அடிபணிய மாட்டேன். எனது கருத்துகளை மக்களிடம் வழக்கம்போல் தெரிவிப்பேன்” என்று கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in