

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு மசோதா - 2013' அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேச உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இடையே இம்மசோதா தாக்கலானது.
இம்மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகளை இரண்டு முறை ஒத்திவைத்தார், ஆந்திர பேரவைத் தலைவர் நடேன்டலா மனோகர்.
இதனிடையே, தெலங்கானா மற்றும் சீமாந்திரா எம்எல்ஏக்கள் பகுதி வாரியாக பிரிந்து நின்று அவை நடவடிக்கைகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, தெலங்கானா மசோதா மாநில அரசுக்கு குடியரசுத் தலைவரால் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்ட பிரிவு 3-ன்படி, மாநிலப் பிரிவினை தொடர்பாக சட்ட மன்றத்தின் கருத்துகளை குடியரசுத் தலைவர் கேட்டிருந்தார்.
இதனை திருப்பி அனுப்புவதற்கு அடுத்த மாதம் ஜனவரி 23ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதரவும் எதிர்ப்பும்
துணை முதல்வர் தாமோதர் ராஜநரசிம்மா உள்ளிட்ட தெலங்கானா பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டதை வரவேற்றனர்.
ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்க்கும் முதல்வர் கிரண் குமார் ரேட்டி, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அவையில் இல்லை.
இந்த மசோதா மீது உடனடியாக விவாதம் நடத்தப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.