

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா ஆகிய இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரையொருவர் சாடிக்கொண்டனர்.
முதலில் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்வீட்டில், “அயல்நாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்கள் இந்தியாவின் பாரம்பரிய மற்றும் இந்திய பாணி நவீன உடைகளில் செல்ல பாஜக அறிவுறுத்த வேண்டும். கோட் மற்றும் டை-யில் இவர்கள் வெயிட்டர்கள் போல் காட்சியளிக்கின்றனர்” என்றார்.
இதற்கு பதில் அளித்துள்ள ராபர்ட் வதேரா தனது பேஸ்புக் பக்கத்தில், “தங்களது வாழ்வாதாரத்துக்காக வெயிட்டர் வேலையில் கடினமாக உழைப்பவர்களை இவ்வாறு தரக்குறைவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது, இழிவானது” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு மீண்டும் பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, “வதேரா தன்னை ஜெயிலுக்குச் செல்லாமல் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அரசியல் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது” என்று கூறினார்.