எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய திருத்தங்களுடன் மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது: 443 உறுப்பினர்கள் ஆதரவு

எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய திருத்தங்களுடன் மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது: 443 உறுப்பினர்கள் ஆதரவு
Updated on
3 min read

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த வகை செய் யும் அரசமைப்பு சட்ட (122-வது திருத்த) மசோதா 2014, அதிமுக தவிர அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் நேற்று நிறைவேறியது.

மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய பிரதமர் நரேந் திர மோடி, இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த இந்த மசோதா, கடந்த ஆண்டு மே மாதம் மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. எனினும், மாநிலங் களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததாலும், இதன் சில அம்சங்களுக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் நிறைவேற முடியாத சூழல் இருந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சிக ளின் கோரிக்கையை ஏற்று சில முக்கிய திருத்தங்களை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து, அதிமுக தவிர காங் கிரஸ் உள்ளிட்ட மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா கடந்த வாரம் மாநிலங் களவையில் நிறைவேறியது.

இதில் சில திருத்தங்கள் செய் யப்பட்டதால் மீண்டும் மக்க ளவையின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம். எனவே, திருத்தங்களுடன் கூடிய இந்த மசோதாவை மத்திய நிதி யமைச் சர் அருண் ஜேட்லி மக்களவை யில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாடு முழுவதும் ஒரே மாதிரி யான, ஒருமுனை வரிவிதிப்புக்கு ஜிஎஸ்டி வழிவகுக்கும். இதன் மூ லம் சரக்கு மற்றும் சேவைகள் நாடு முழுவதும் தடையின்றி பய ணிக்கும். இது மிகவும் முக்கிய மான மறைமுக வரி சீர்திருத்தம் ஆகும். நீண்டகால அடிப்படையில் இது நாட்டுக்கு பயனளிக்கும்.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் வரி ஏய்ப்பு செய்வது குறையும். வரி மேல் வரி விதிக்கும் முறைக்கு முடிவு கட்டப்படும். மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் ஆதாரம் பெருகும். தொழில் செய்வதற்கான சூழல் மேம்பாடு அடைந்து உற்பத்தித் துறையில் முதலீடு அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து விவாதத்தை தொடங்கிவைத்து பேசிய காங் கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, “ஜிஎஸ்டி மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதே நேரம், வரி விகிதம் குறைவாக நிர்ணயிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான அடுத்தடுத்த மசோதாக்களை பண மசோதா வாக அல்லாமல் நிதி மசோதாவாக நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

அதிமுக எதிர்ப்பு

அதிமுக உறுப்பினர் பி.வேணு கோபால் பேசும்போது, “தமிழ்நாடு உற்பத்தி மாநிலம் என்பதால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்ப டும். இது தொடர்பான முதல்வர் ஜெயலலிதாவின் அச்சத்தை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே இந்த மசோதாவை எதிர்க்கிறோம்” என்றார்.

இதையடுத்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினர். விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பல்வேறு கேள் விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி குறுக்கிட்டு பேசியதாவது:

கடந்த 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளை யனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். சுதந்திரம் பெறுவதற்கு அது மிக முக்கிய நடவடிக்கையாக அமைந் தது. இதுபோல, வரி தீவிரவாதத்தி லிருந்து விடுதலையாவதற்காக நாம் மேற்கொண்டு வரும் முயற் சிக்கு இந்த நாள் (ஆகஸ்ட் 8) ஒரு முக்கிய காரணமாக அமைய உள்ளது.

ஜிஎஸ்டி மசோதா தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். மேலும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 29 மாநில அரசுகளுடனும் ஆலோசனை நடத்தினோம்.

கட்சிகளுக்கு நன்றி

இதன் பலனாக, ஜிஎஸ்டி மசோதா நிறைவேறி உள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசியல் கட்சிகளுக் கும் மனமார்ந்த நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு வழங்கியது மிகவும் பெருமித மாக உள்ளது.

இதை எந்த ஒரு கட்சியின் அல்லது ஆட்சியின் வெற்றியா கவோ நாம் பார்க்க முடியாது. இது நமது ஜனநாயக பண்பாட் டுக்கும் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வெற்றி ஆகும்.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் வர்த்தகர்கள் நுகர்வோருக்கு கட்டாயமாக ரசீது தர வேண்டும். இதனால் ஊழல், கருப்புப் பணப் புழக்கம் ஆகியவை குறையும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு அமலுக்கு வருவதால் நுகர்வோர் ‘ராஜா’வாக இருப்பர். சிறுதொழில் நிறுவனங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நுகர்வோர் மற்றும் சிறுவணிகர்கள் அதிக அளவு பயன் பெறுவர். சிறு வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். சமச்சீ ரற்ற வளர்ச்சி என்ற பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதேநேரம் உற்பத்தி மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், அந்த மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பல்வேறு கேள்வி களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்துப் பேசினார். பின்னர், இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது வாக்கெடுப்பை புறக்க ணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அவையில் இருந்த 443 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

நாடாளுமன்ற இரு அவை களிலும் இந்த மசோதா நிறைவேறி இருப்பதால், குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக் கப்படும். அதன் பிறகு மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புத லுக் காக அனுப்பி வைக்கப்படும். இந்த மசோதா சட்டமாவதற்கு குறைந்தபட்சம் 15 மாநில சட்டப் பேரவைகளின் ஒப்புதல் தேவை.

இது தொடர்பாக பாஜக ஆளும் மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேசி வருகிறது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தயாராக இருப்பதாக பல மாநில அரசுகள் உறுதி அளித்துள்ளன.

அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்படும். அதில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பர். இந்த கவுன்சில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) மற்றும் மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ஆகிய 3 மசோதாக்களை தயாரிக்கும். வரி விகிதம் மற்றும் அதை அமல் படுத்துவதற்கான நடைமுறைகள் இதில் இடம்பெற்றிருக்கும்.

அதன் பிறகு, சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி ஆகிய 2 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியிருக்கும். இதுபோல எஸ்ஜிஎஸ்டி மசோதாவை ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி யாக நிறைவேற்ற வேண்டியி ருக்கும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in