Last Updated : 18 Jul, 2016 06:16 PM

 

Published : 18 Jul 2016 06:16 PM
Last Updated : 18 Jul 2016 06:16 PM

சீக்கியர் மனதை புண்படுத்தியதற்கு பிராயசித்தம்: பொற்கோயிலில் பாத்திரம் கழுவிய கேஜ்ரிவால்

பொற்கோயிலுக்கு அருகே துடைப்பம் இருப்பதாக வடிவமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை சர்ச்சையை கிளப்பியதால், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமர்தசரஸ் பொற்கோயிலுக்கு வந்து, சமையலறையில் பாத்திரங்களைக் கழுவி பிராயசித்தம் தேடிக்கெண்டார்.

இதற்காக, ஞாயிற்றுக் கிழமை இரவே அமர்தசரஸ் வந்துவிட்ட கேஜ்ரிவால், இன்று காலை பொற்கோயிலின் சமுதாய சமையல் கூடத்துக்குள் சென்று, அங்கிருந்த பாத்திரங்களை கழுவினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் சமையலறையில் இருந்தார்.

அதன் பிறகு, கோயிலின் பவித்ர ஸ்தானத்தில் சுமார் அரை மணி நேரம் அமர்ந்து, பக்தி கீர்த்தனைகளில் மூழ்கியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கேஜ்ரிவால் கூறும்போது,

‘ஆம் ஆத்மி கட்சியின் இளைஞரணி தேர்தல் அறிக்கையில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கோரும் வகையில், சேவை செய்திட இங்கு வந்தேன். சேவையை முடித்துவிட்டு, ஷாபாத் கீர்த்தனையை கேட்டுக்கொண்டிருந்தபோது, மனது மிகவும் லேசானது. தற்போது நான் மன நிம்மதியுடன் இருக்கிறேன்’ என்றார்.

கேஜ்ரிவாலுடன், ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில ஒருங்கிணைப்பாளர் சுச்சா சிங் சோட்டேபூர், இளைஞரணித் தலைவர் ஹர்ஜோத் பெயின்ஸ், எம்பிக்கள் பகவந்த் மான், சாது சிங், டெல்லி எம்எல்ஏ ஜர்னைல் சிங் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு பேசியதன் மூலம், மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆஷிஷ் கேதானும் கேஜ்ரிவாலுடன் வந்திருந்தார்.

பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சி, கடந்த 3-ம் தேதி இளைஞரணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதன் முகப்பு பக்கத்தில் அமிர்தசரஸ் பொற்கோயிலும், அதன் அருகிலேயே கட்சியின் சின்னமான துடைப்பத்தை அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு சீக்கியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x