

நீடித்த வளர்ச்சியை கருத்தில் கொள்ளாத வளர்ச்சித் திட்டங்களால் நாட்டில் உள்ள புகழ்பெற்ற 10 பறவைகள் சரணாலயங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பாம்பாய் இயற்கை வரலாறு சங்கம் (பிஎன்எச்எஸ்) மற்றும் அதன் சர்வதேச கூட்டாளியான பேர்டுலைஃப் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து, ‘ஆபத்தான நிலையில் முக்கிய பறவைகள் மற்றும் உயிரி வாழ்விடங்கள் (ஐபிஏ)’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டன. அதன் விவரம்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பிளமிங்கோ சிட்டி, மகாராஷ்டிராவின் சோலாபூர்-அகமது நகரில் உள்ள கிரேட் இந்தியன் பஸ்டர்டு சரணாலயம் மற்றும் மும்பையில் உள்ள சேவ்ரி-மகுல் கிரீக் உள்ளிட்ட 10 முக்கிய பறவைகள் சரணாலயங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள திஹைலா ஜீல், கரேரா வன விலங்கு சரணாலயம், சாய்லனா கர்மர் சரணாலயம், சர்தார்பூர் புளோரிகான் சரணாலயம், அந்தமான்-நிக்கோபரில் உள்ள தில்லாங்சாங், குர்கானில் உள்ள பசாய், கர்நாடகாவில் உள்ள ரானேபன்னூர் ஆகியவை ஆபத்தான நிலையில் உள்ள மற்ற பறவைகள் சரணாலயங்கள் ஆகும். இந்தப் பட்டியலில் இல்லாத மற்ற சில சரணாலயங் களும் இதே நிலையில்தான் உள்ளன.
உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களால் ஏற்படும் இடையூறுகள், தவறான மக்கள் விரோத பாதுகாப்பு கொள்கைகள், தொழிற்சாலை மற்றும் கழிவு மாசு, வேகமான நகரமயமாக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணங்களால் பறவைகள் சரணாலயங்கள் அழிவுப் பாதையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.