

பிஹாரில் கனமழை காரணமாக கங்கையில் நீர்வரத்து அதிகரித்து 4 மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. இதனை முதல்வர் நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து ஆய்வு செய்தார்.
பிஹாரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கங்கையில் தண்ணீர் அபாய அளவுக்கு மேல் செல்கிறது. இதனால் அதன் கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பாட்னா, நாலந்தா, ஜெகனாபாத், கயா ஆகிய மாவட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். பின்னர் கயா நகரில் இது தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே கங்கையில் பாட்னா மாவட்டம் காந்தி காட், ஹத்திடா, பாகல்பூர் மாவட்டம், கஹல்காவோன் ஆகிய இடங்களிலும் காக்ரா நதியில் சிவான் மாவட்டம், கங்காபூர் – சிஸ்வான் பகுதியிலும் கோசி நதியில் காகரியா மாவட்டம், பல்தாரா என்ற இடத்திலும் தண்ணீர் அபாய அளவுக்கு மேல் செல்வதாகவும் என்றாலும் பிஹாரில் எந்த மாவட்டமும் தற்போது வெள்ளத்தின் பிடியில் இல்லை என்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூறியுள்ளது.