

ஜார்க்கண்ட் மாநிலம், பாலாமவ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
நாங்கள் ஆட்சியிலிருந்தபோது, கருப்பு பணத்தை மீட்க மேற் கொண்ட முயற்சியை ஏளனமாக பாஜக பேசியது. இப்போது, பாஜக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதில் தோல்வி யடைந்துள்ளது.
கருப்பு பணத்தை மீட்பதில் நாங்கள் எந்தவிதமான பிரச்சினைகளை சந்தித்தோமோ, அதே பிரச்சினைகளைத்தான் இப்போது பாஜக பேசி வருகிறது. நாட்டை நிர்வகிப்பது என்பது ஒரு கலை. அதற்கு பொறுமையும், அக்கறையும் அவசியம். பாஜ கவுக்கு இந்த இரு குணங்களும் இல்லை.
தூய்மையான இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்துகிறது. ஒவ்வொருவர் கையிலும் துடைப்பத்தைக் கொடுப் பதால் ஒரு பயனும் இல்லை. தூய்மையைப் பற்றி அனை வருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பழங்குடியினருக்குப் பாதகமாக நில உரிமையை பாதுகாப்பதற்கான சட்டங்களில் மாற்றம் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பின்பு, 9 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்றுள்ளது. அக்கட்சி வளர்ச்சிப் பணிகள் எதையும் செய்யவில்லை. ஊழலைத்தான் வளர்த்துவிட்டுள்ளது. எங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால், இந்த மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை திறம்பட மேற்கொள்வோம்.