

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மதக்கலவர வழக்குகளில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் சர்தானா தொகுதி எம்.எல்.ஏ.வான சங்கீத் சோமுக்கு போட்டியிட சீட் வழங்கப்படாததை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சியின் தேசிய தலைவர் ராஜ் நாத்சிங்கின் உருவ பொம்மையை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முசாபர்நகரின் கவால் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அங்கும் அதன் அருகிலுள்ள ஷாம்லி மாவட்டத்திலும் கலவரம் ஏற்பட்டது. இதில் அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் நாற்பதாயிரம் பேர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
இந்த கலவரத்தை தூண்டியதாக அப்பகுதியின் பாஜக எம்.எல்.ஏ.க்களான சுரேஷ் ராணா மற்றும் சங்கீத் சோம் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் பிறகு ஜாமீன் பெற்றவர்களை, உபியின் ஆக்ராவில் கடந்த நவம்பர் 21-ல் நடந்த ’விஜய் சங்ராணந்த்’ எனும் பெயரிலான நரேந்தர் மோடியின் கூட்டத்தில் பாராட்ட திட்டமிடப்பட்டது.
இது குறித்து எழுந்த சர்ச்சையின் காரணத்தால் மோடி மேடை ஏறும் முன்பாகவே மாநில பாஜக பொறுப்பாளர் அமித்ஷா மற்றும் பாஜகவின் சட்டமன்றத் தலைவர் லால்ஜி டான்டன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனால், மக்களவை தேர்தலில் போட்டியிட இருவருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அங்கு ஜாட் சமூகத்தை சேர்ந்த சஞ்சீவ் பலியான் கடந்த சனிக்கிழமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சங்கீத் சோமின் ஆதரவாளர்கள் முசாபர்நகரின் மத்கரீம்பூர் கிராமத்தில் கூடி பாஜக தேசிய தலைவரான ராஜ்நாத்சிங் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் அனைவரும் முசாபர்நகரை சுற்றியுள்ள ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் இங்கு பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பலியானை தம் கிராமங்களில் நுழைய அனுமதிக்க மாட்டோம் எனவும் பாஜக தலைமையிடம் எச்சரித்துள்ளனர்.
சங்கீத் சோம் மற்றும் சுரேஷ் ராணா ஆகிய இருவரும் ராஜ்நாத் சிங் சார்ந்த ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்கள்.