உ.பி. மாநில காங்கிரஸ் தலைவராக ராஜ் பப்பர்

உ.பி. மாநில காங்கிரஸ் தலைவராக ராஜ் பப்பர்
Updated on
1 min read

உத்திரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பாலிவுட் நடிகர் ராஜ் பப்பர் அமர்த்தப்பட்டுள்ளார். இது அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா வாதேராவின் வியூகமாகக் கருதப்படுகிறது

உபி மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி அங்கு போட்டியில் இருக்கும் பல்வேறு கட்சிகள் தங்கள் நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்து வருகின்றன. இந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் உபி மாநில தலைவராக ராஜ் பப்பர் அமர்த்தப்பட்டுள்ளார். மூத்த துணைத் தலைவர்களாக ராஜாராம் பால், ராஜேஷ் மிஸ்ரா, பகவதி பிரஸாத் சவுத்ரி மற்றும் இம்ரான் மசூத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை இன்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான ஜனார்தன் துவேதி வெளியிட்டார்.

பாலிவுட்டின் நடிகரான ராஜ் பப்பர் உபியை சேர்ந்தவர். இவர் முதன்முதலாக அரசியலில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் கடந்த 1989-ல் இணைந்தார். பிறகு, அமர்சிங் மூலமாக சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்தவர், மக்களவை உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தார். இதே கட்சி சார்பில் மாநிலங்களவைக்கும் 1994 முதல் 1999 வரை உறுப்பினராக இருந்தார். 2006-ல் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ் பப்பர், காங்கிரஸில் இணைந்தார். 2009 மக்களவை தேர்தலில் உபி முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவை தோற்கடித்தார். கடந்த தேர்தலில் காஜியாபாத்தில் போட்டியிட்டு மத்திய இணை அமைச்சரான வி.கேசிங்கிடம் தோற்றவர் மீண்டும் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

முன்னதாக இன்று காலை, உபி காங்கிரஸ் தலைவராக இருந்த நிர்மல் கத்ரி, டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்தார். இவரிடம் ராஜினாமாவை பெற்ற காங்கிரஸ் புதிய தலைவராக ராஜ் பப்பரை அறிவித்துள்ளது. உபியின் பைசாபாத் தொகுதியின் முன்னாள் எம்பியான கத்ரி., உபி மாநில ஸ்கிரீனிங் கமிட்டியின் தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார்.

உபி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரியங்கா வதேரா களம் இறக்கி விடப்பட்டுள்ளார். மாநில தேர்தல் பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் கட்சியில் பல அரசியல் மாற்றங்கள் செய்து வருகிறார். இந்தவகையில், உபி மாநில தலைவராக ராஜ் பப்பர் அமர்த்தப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த முடிவு, இன்று காலை உபி மாநில பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் வீட்டில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிரியங்காவும் கலந்து கொண்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in