ராணுவ நிலத்தில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு: மகாராஷ்டிராவில் போலீஸாருடன் விவசாயிகள் மோதல்

ராணுவ நிலத்தில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு: மகாராஷ்டிராவில் போலீஸாருடன் விவசாயிகள் மோதல்
Updated on
1 min read

வாகனங்களுக்குத் தீ வைப்பு - 12 போலீஸார் உட்பட 22 பேர் காயம்

மகாராஷ்டிராவில் ராணுவத்துக் குச் சொந்தமான நிலத்தில் சுற்றுச் சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸாரின் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதில் 12 போலீஸார் உட்பட 22 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நவாலி பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான 1600 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் இரண்டாம் உலகப் போரின்போது மத்தியப் பாதுகாப்புத் துறை வசம், மாநில அரசால் ஒப்படைக்கப்பட்டது.

ராணுவத்துக்குச் சொந்தமான இந்நிலத்தில் சுமார் 400 ஏக்கர் அப்பகுதியினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில் மேலும் ஆக்கிரமிப்பு தொடராமல் இருக்க அங்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் கல்யாண் ஹாஸி மாலாங் சாலையில் திரண்டு நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

சாலையில் மரங்களை வெட்டிப் போட்டும், டயர்களைக் கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், போலீஸார் மீது கற்களை வீசினர். தடுக்க வந்த போலீஸாருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கிச் சூடு

இதையடுத்து போலீஸார் ரப்பர் துப்பாக்கி குண்டுகளால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர். முன்னதாக அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேன், 3 லாரி மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் போராட்டக் காரர்களால் தீ வைக்கப்பட்டது. நிலைமை மோசமடைந்ததை அடுத்து போலீஸ் மற்றும் வரு வாய்த் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் போலீஸார் 12 பேர் உட்பட 22 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ராணுவத்துக்குச் சொந்தமான சுமார் 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி மாநில அரசிடம் ராணுவம் உதவி கேட்டது. மேலும் இந்த நிலத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க உதவுமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வரும் 29-ம் தேதி புதுடெல்லியில் கூட்டம் நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in