ஆந்திரம், ஒடிசாவில் கன மழைக்கு 45 பேர் பலி

ஆந்திரம், ஒடிசாவில் கன மழைக்கு 45 பேர் பலி
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் ஐந்தாவது நாளாகத் தொடரும் கனமழையால் ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளன. கனமழை காரணமாக வெவ்வேறு சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 72,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனிடையே, ஒடிசாவில் கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புக்குப் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த ஐந்து நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடல் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் காரணமாகவே, ஆந்திரத்தில் கனமழை பெய்து வருகிறது.

தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மரம் விழுந்தது, சுவர் இடிந்து விழுந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் 29 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடலோர மாவட்டங்களில் 135 நிவாரண முகாம்களை அரசு அமைத்துள்ளது.

ஸ்ரீகாகுளம், குண்டூர், நல்கொண்டா, பிரகாசம், மஹபூப்நகர், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த 12 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ரயில்கள் ரத்து:

மழை காரணமாக, புவனேஸ்வர் - பெங்களூரு பிரசாந்தி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ், புரி - திருப்பதி எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல் வயல், மக்காச்சோளம், பருத்தி, துவரம்பருப்பு உள்ளிட்ட 2.5 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான சாகுபடிப் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. ஓடைகள், சிற்றாறுகள், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால், பலபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

117 குறும்பாசனக் குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. சில பகுதிகளில் சாலைகளில் மூன்றடிக்கும் அதிகமான அளவு வெள்ளம் ஓடுகிறது. பல கால்வாய்கள் உடைப்பெடுத்து விட்டன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவிலும் பாதிப்பு : ஒடிசா மாநிலத்திலும் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்ரக், ஜெய்பூர், நயாகர் மாவட்டங்களிலும் குறிப்பாக கஞ்சம் மாவட்டத்துலும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ருசிகுல்யா, கோடஹடா, வன்சாதார ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.ஒடிசாவில் இதுவரை மழை,வெள்ளத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இடை விடாமல் பெய்யும் மழையால் விளை நிலங்களில் வெள்ளம் புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கஞ்சம் மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் 3 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 2,276 கிராமங்களில் 5 லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in