Last Updated : 18 Apr, 2015 12:40 PM

 

Published : 18 Apr 2015 12:40 PM
Last Updated : 18 Apr 2015 12:40 PM

தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவில் பந்த்: இயல்பு வாழ்க்கை முடங்கியது- வாட்ஸ் அப் வதந்தியால் தமிழர்கள் பீதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சிப்பதை எதிர்க்கும் தமிழகத்தைக் கண்டித்து கன்னட அமைப்புகள் நடத்தும் பந்த் காரணமாக கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் மேக்கேதாட்டு என்னுமிடத்தில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றது. இதை எதிராத்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போரட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பேருந்துகள் இயங்கவில்லை:

இதற்க்கு ஆதரவு தெரிவித்து கர்நாடகாவில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பேருந்துகள் இயங்கவில்லை. முழு அடைப்புப் போராட்டத்துக்கு திரைத் துறையினர் ஆதரவு அளித்து இன்று படபிடிப்பை ரத்து செய்துள்ளனர். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

எல்லையில் பாதிப்பு:

மேலும் கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன இதே போல் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் தமிழக கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறுத்தப்பட்டது எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் இரு மாநில எல்லைப் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

திதி கொடுக்கும் போராட்டம்:

கன்னட ரக்க்ஷனாவேதிகே, கன்னட ஜனபராவேதிகே கன்னடா ஜாக்ருதிவேதிகே உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் தமிழகத்திற்க்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர் மேலும் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளை எரித்தனர் இருவருக்கும் திதி கொடுக்கும் போரட்டத்திலும் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை முற்றுகை:

கன்னட அமைப்பினர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அதனை தடுத்து நிறுத்திய போலீஸார் சுமார் 500 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வாட்ஸ் அப் வதந்தி:

இதற்கிடையில், தமிழகத்தைக் கண்டித்து நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தலாம் என வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரவியது. இதனால், தமிழர்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.

காவல் ஆணையர் விளக்கம்:

இது தொடர்பாக 'தி இந்து' சார்பில் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டியை தொடர்பு கொண்ட போது, "வாட்ஸ் அப் மூலம் பரவி வரும் தாக்குதல் குறுந்தகவல் வெறும் வதந்தி. தமிழ் மக்கள் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால், காவல்துறையை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" என்றார்.

வாட்ஸ் அப்பில் வந்த வதந்தி:

"நாளை தமிழகத்தை எதிர்த்து மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்பினரால் முழு அடைப்பு நடத்தப்பட உள்ளது. இத்தகைய பரப்பரப்பான சூழலில் தமிழர்கள் தாக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நமக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளன.

அவ்வாறு தாக்கப்பட்டாலோ, அல்லது தாக்குதலுக்கான அறிகுறி தெரிந்தாலோ கர்நாடக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய ஆர்வலர்கள் பாதுகாப்பு அளிக்க தயார் நிலையில் உள்ளனர்.,

பெங்களூரு மற்றும் கர்நாடக தமிழர்கள் கர்நாடகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : 9986935293, 9886143326, 9845993735 9620183583 8892883836, 9591001913 அனைவரும் இதை முடிந்த அளவில் பகிரவும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x