Published : 08 May 2017 08:29 PM
Last Updated : 08 May 2017 08:29 PM

லாலுவுடன் உறவை துண்டித்தால் ஆதரவு: நிதிஷ் குமாருக்கு பாஜக தூண்டில்

லாலு பிரசாத் யாதவ் உடனான உறவை முதல்வர் நிதிஷ்குமார் துண்டித்துக்கொள்ள முடிவு செய்தால் அவருக்கு ஆதரவு தருவது குறித்து யோசிப்போம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்திடம் மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், லாலுவின் கட்சியுடன் கூட்டணி உறவை முதல்வர் நிதிஷ்குமார் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று பிஹார் பாஜக அழைப்பு விடுத்தது.

பிஹாரில் பாஜகவுடன் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 17 ஆண்டுகள் கூட்டணி அமைத்திருந்தது. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி உறவை நிதிஷ் குமார் முறித்துக் கொண்டார். கடந்த 2015-ல் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார்.

நிதிஷ் குமார் அரசில் துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பதவி வகித்துள்ளார். தற்போது லாலுவுக்கு எதிரான உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சுஷில்குமார் மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லாலுவை அவரது இல்லத்தில் பாஜக மூத்த தலைவரும் ஜார்க்கண்ட் அமைச்சருமான சரயு ராய் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. என்றாலும் திங்கள்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை பிஹார் பாஜக வரவேற்பதாக கூறியது.

பிஹாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறும்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பு இது. இதை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு குறித்து அதிகம் பேச முடியாது” என்றனர்.

இதனிடையே பாட்னாவில் உள்ள லாலுவின் வீடு நேற்று களையிழந்து காணப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து லாலுவின் கருத்தை எதிர்பார்த்து அவரது வீட்டு வாயிலில் பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். ஆனால் அவரது வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு குறித்து லாலு தனக்கு நெருக்காமான சிலரிடம் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x