2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இறுதி வாதம் முடிந்தது: 3 மாதத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இறுதி வாதம் முடிந்தது: 3 மாதத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இறுதி வாதம் நேற்றுடன் முடிந்தது. 3 மாதத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது. இதுபோல அமலாக்கத் துறை ஒரு வழக்கு தொடுத்தது. இந்த மூன்று வழக்குகளையும் நீதிபதி ஓ.பி.சைனி விசாரணை நடத்தி வருகிறார்.

முதல் வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மற்றும் 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீது, ஐபிசி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் 2011-ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 122 உரிமங்களை முறைகேடாக வழங்கியதால் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக 154 சாட்சிகளின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட் டுள்ளது.

2-வது வழக்கில் எஸ்ஸார் குழும நிறுவனர்கள் ரவி ரூயா மற்றும் அன்ஷுமன் ரூயா, லூப் டெலிகாம் நிறுவனர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர், எஸ்ஸார் குழும இயக்குநர் விகாஷ் சரப் மற்றும் 3 நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை 2014-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, எஸ்டிபிஎல் புரமோட்டர்ஸ் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in