

காஷ்மீரில் 10-வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து அங்கு ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை யடுத்து பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டது. எனினும் தொடர்ந்து வன் முறை சம்பவங்கள் நடப்பதால், நேற்று 10-வது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப் பட்டது.
இதுகுறித்து போலீஸ் மூத்த அதிகாரி கூறும்போது, ‘‘பத்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. எனினும், நோயாளிகள் மட்டும் உதவியாள ருடன் வெளியில் சென்று வர அனுமதிக்கும்படி பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அதேபோல் விமான நிலையம் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதற்கிடையில் கடந்த சனிக் கிழமை குப்வாரா மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியது. போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலி யானார். இதையடுத்து காஷ்மீர் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந் துள்ளது.
பிராந்திய மொழி நாளிதழ்கள் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வெளியிட நேற்று 2-வது நாளாக தடை செய்யப்பட்டிருந்தன. இந்த தடை இன்று வரை இருக்கும். நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேபிள் தொலைக்காட்சி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
மேலும், பாகிஸ்தான் சேனல்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்த 2 தனியார் சேனல்களை எடுத்து விட்டு மற்ற சேனல்களை ஒளிபரப்ப கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர் களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது. எனினும், மொபைல் போன், இணையதள வசதி ஆகியவை தொடர்ந்து தடை செய்யப்பட் டுள்ளன. எனினும் பிஎஸ்என்எல் போஸ்ட் பெய்ட் சேவை மட்டும் தடையின்றி தொடர்ந்து செயல் பாட்டில் உள்ளது.
காஷ்மீர் பாரமுல்லாவில் இருந்து பனிஹால் வரை செல்லும் ரயில் சேவை ரத்து செய் யப்பட்டுள்ளது. வரும் 4 நாட்களில் நடக்கவிருந்த நேர்முகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காஷ் மீரில் எல்லா பள்ளிகள், கல்லூரி கள் வரும் 24-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாத தலைவர்கள் சயத் அலி கிலானி, மிர்வெய்ஸ் உமர் பரூக், முகமது யாசின் மாலிக், ஷபீர் அகமது ஷா உட்பட பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் காஷ்மீரில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கூடுதலாக 20 கம்பெனி (2000 பேர்) மத்திய ரிசர்வ் போலீஸ் படையை மத்திய அரசு அனுப்பி உள்ளது.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து ஆராய, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித் மற்றும் அம்பிகா சோனி ஆகிய 2 பேர் கொண்ட குழுவை அங்கு அனுப்பி வைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
மாநிலத்தில் வன்முறை சம்ப வங்கள் தொடர்கதையாக உள்ள நிலையில், அங்குள்ள கள நில வரத்தை குறித்து இந்தக் குழு ஆராயும். பின்னர் டெல்லி திரும் பும் இக்குழு அங்குள்ள நிலவரம் குறித்து சோனியாவிடம் விளக்க மாக எடுத்துக் கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - ஏஎன்ஐ
கடந்த ஒரு வாரத்துக்குள்ளாக 2 முறை நிறுத்தி வைக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 1,755 பக்தர்களைக் கொண்ட புதிய குழு நேற்று ஜம்முவில் இருந்து அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
ஜம்மு முகாமில் இருந்து, 1,422 ஆண்கள் மற்றும் 333 பெண்கள் என மொத்தம், 1,755 யாத்ரீகர்கள் 52 வாகனங்களில் அமர்நாத் நோக்கி ஞாயிற்றுக் கிழமை காலை புறப்பட்டதாக ஜம்மு துணை ஆணையாளர் சிம்ரன்தீப் சிங் தெரிவித்தார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து தெற்கு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டதால், இம்மாதம் 9-ம் தேதி அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. பின்னர், 14-ம் தேதியும் கலவரம் காரண மாக நிறுத்திவைக்கப்பட்டது. இதை கண்டித்து சாதுக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.