

கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில் காயமடைந்த மற்றும் பார்வை குறைபாடுள்ள யானைகள் அணிவகுப்பில் பங்கேற்றதாக பீட்டா இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இவ்விழாவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை யானைகளைக் கட்டுபடுத்த பயன்படுத்தியதாகவும் பீட்டா இந்தியா கூறியுள்ளது.
இதுகுறித்து பீட்டா இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருச்சூர் பூரம் விழாவில் பங்கேற்ற யானைகள் காலில் காயங்கள் ஆறாமல் இருந்தன. இதற்கு ஆதரமாக புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன.
யானை பாகன்கள் அவர்களது யானைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடை செய்யப்பட்ட உலோகக் கம்பி மற்றும் மரக் குச்சியால் அடித்தனர். வெப்பமான சாலைகளில் யானைகளின் அணிவகுப்பு நடந்தது சென்றனர்.
யானைகளின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு அவற்றின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் திருச்சூர் பூரம் விழாவின் வாணவேடிக்கை நடைபெறும் இடங்களில் அருகில் நிற்கவும் யானைகள் கட்டாயப்படுத்தப்பட்டன.
யானைகள் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளான நிலையில் அவைகளுக்கு முறைகேடான விதத்தில் உடல் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
விலங்குகள் பாதுகாப்பு குறித்து உயர் நீதிமன்றம் மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டங்கள் உத்தரவுகளை மீறி யானைகள் திரூச்சூர் பூரம் விழாவில் துன்புறுத்தப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பீட்டா இந்தியா தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி அவ்விளையாட்டுமீது தடை விதிக்க கூறி உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்து அதற்கு தடையும் வாங்கியது. ஆனால் ஜனவரி மாதம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடைபெற்ற போரட்டத்தை தொடர்ந்து சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு விழா தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்தது.
இந்த நிலையில் கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா இந்தியா நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.