Last Updated : 05 Mar, 2017 12:16 PM

 

Published : 05 Mar 2017 12:16 PM
Last Updated : 05 Mar 2017 12:16 PM

மூன்றாவது கட்சி போட்டியில் இருக்க கூடாது: சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆம் ஆத்மி அமைக்கும் புது வியூகம்

சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி புதிய வியூகம் அமைத்து வருகிறது. இதன்படி தாங்கள் போட்டியிடும் மாநிலங்களில் மூன்றாவது கட்சி போட்டியில் இருக்கக் கூடாது என அக்கட்சி கருதுகிறது.

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 8-ம் தேதியுடன் முடிகிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் 11-ல் வெளியாக உள்ளன. இதையொட்டி டெல்லியில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடை பெற்றது. தேர்தல் முடிவுகளுக்கு பின் என்ன செய்வது என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. அடுத்து வரும் பிற மாநிலத் தேர்தல்களில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வட்டாரம் கூறும்போது, “நாங்கள் பிற மாநிலங் களில் போட்டியிடுவதாக இருந் தால், அவை காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி செய்யும் மாநிலங் களாக இருக்க வேண்டும். அங்கு மூன்றாவதாக ஒரு கட்சி போட்டியில் இல்லாமலும் இருக்க வேண்டும். அங்கு இரு கட்சி தலைவர்கள் மீதும் அதிருப்தி மற்றும் ஊழல் புகார்கள் இருக்க வேண்டும். இது போன்ற மாநிலங்கள்தான் எங் களுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தரும். இதற்கு டெல்லி சிறந்த உதா ரணம் ஆகும்” என்று தெரிவித்தனர்.

டெல்லிக்கு பிறகு அதேபோன்ற சூழல் பஞ்சாபில் இருந்தது. இங்கு காங்கிரஸுக்கு பிறகு பாஜக - அகாலிதளம் கூட்டணி மீது மக்க ளுக்கு ஏற்பட்ட வெறுப்பு, ஆம் ஆத்மிக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.

இதேநிலை கோவாவிலும் காணப்பட்டதால் அங்கும் ஆம் ஆத்மிக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. தற்போது இவ்விரு மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஆம் ஆத்மி நம்புகிறது.

இந்த ஆண்டு இறுதியில் இமாச்சலப் பிரதேம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்து இம்மாநிலங்களை ஆம் ஆத்மி தேர்வுசெய்ய உள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கி ரஸும், குஜராத்தில் பாஜகவும் ஆட்சி செய்கின்றன. இவற்றில் இமாச்சலத்தை விட குஜராத்தில் போட்டியிடுவதையே ஆம் ஆத்மி யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் அதிகம் விரும்புகிறார். இது பிரதமர் மோடி ஆட்சி செய்த மாநிலம் என்பதாலும், இங்கு தனக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாலும் இங்கு போட்டியிட கேஜ்ரிவால் விரும்புகிறார்.

இந்நிலையில் குஜராத் தேர்தல் பொறுப்பாளராக ஆம் ஆத்மியின் நிறுவனர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு குஜராத்தில் முகாமிடுவார் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x