கலாம் நினைவு மணிமண்டபத்துக்கு ஜூலை 27-ல் அடிக்கல்: மத்திய அரசு அறிவிப்பு

கலாம் நினைவு மணிமண்டபத்துக்கு ஜூலை 27-ல் அடிக்கல்: மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிக்கு வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் இது குறித்த கேள்வியை திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் எழுப்ப பதில் அளித்த மனோகர் பரிக்கர், நினைவு மண்டபம் எழுப்ப 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது, இப்போதைக்கு மத்திய அரசின் வசம் 1.8 ஏக்கர்தான் உள்ளது என்றார்.

“ஆனால் கையில் உள்ள நிலத்தில் வரும் 27-ம் தேதி அப்துல் கலாம் நினைவு மணி மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படும். வடிவமைப்பு ஏற்கெனவே முடிவாகி விட்டது, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முழுமூச்சுடன் செயல்படுவோம்” என்றார் மனோகர் பரிக்கர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடம் ராமேசுவரம் அருகில் பேய்க்கரும்பு எனுமிடத்தில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பலரும் இங்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது நினைவிடத்திலேயே, அறிவுசார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால் பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் நினைவிடம் பராமரிப்பு மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையே கலாமின் முதலாமாண்டு நினைவு நாளான ஜூலை 27-ம் தேதி அவரது நினைவிடத்தில் மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாகவும், விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கலாம் நினைவிடம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசினார். அப்போது, கலாம் நினைவிடம் பராமரிக்கப்படாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அதன்பின்னர் பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் இதுபற்றி விளக்கம் அளிக்கும் போது, "கலாம் நினைவிடம் கட்டும் பணியில் தமிழக அரசு முழு ஆதரவை வழங்கிவருகிறது. இதற்காக மத்திய அரசு தரப்பில் 5 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு 1.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தந்துள்ளது. கூடுதல் நிலம் கையகப்படுத்துவதற்காக காலம் தாழ்த்த மாட்டோம். வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நிச்சயம் நடக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in