

திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம், சமாஜ்வாதி தவிர அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, கடந்த 10-ஆம் தேதி முதல் தான் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்த ஹசாரே, மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமைக்கும் பாராட்டு தெரிவித்தார். ஊழலை எதிர்கொள்ள தேசம் தயாராகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:"லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஊழலுக்கு எதிரான ஒரு நல்ல முயற்சி. இதனால் 100% ஊழல் தடுக்கப்படாவிட்டாலும் கூட 50% அளவாவது ஊழல் நிச்சயம் தடுக்கப்படும். மக்களுக்கு இதனால் சற்று ஆறுதல் பெறுவர்." என்றார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னர், இந்த மசோதா சட்ட அந்தஸ்து பெறும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 10-ஆம் தேதி துவக்கினார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இவ்விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு நல்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, ராகுல் முயற்சியை பாராட்டி அண்ணா ஹசாரே, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதினார்.
இத்தகைய சூழலில் நேற்று மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.