

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாநகராட்சியில் 3,275 ‘ஸ்வீப்பர்’ பணியிடங்களுக்கு பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உட்பட சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தப் பணிக்கு கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதற்கு பட்டம், பட்ட மேற்படிப்பு என உயர்கல்வி படித்தவர்களும் அதிக எண்ணிக்கையில் விண் ணப்பித்துள்ளனர். இதுவரை சுமார் 5 லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. இந்த எண்ணிக்கை 7 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
ஒப்பந்த அடிப்படையிலான 3,275 ‘ஸ்வீப்பர்’ பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என கான்பூர் மாநகராட்சி சமீபத்தில் விளம்பரம் செய்திருந்தது. இதில் 1,500 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும் மற்ற இடங்கள் இடஒதுக்கீடு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களைச் சரி பார்த்து, அவற்றைக் கணினியில் பதிவேற்றும் பணி தற்போது நடந்து வருவதாக அந்த அதிகாரி கூறினார்.