Published : 06 Aug 2016 07:47 AM
Last Updated : 06 Aug 2016 07:47 AM

என்ஜிஓ.க்களுக்கு குவியும் வெளிநாட்டு நிதி : 2014-15-ல் ரூ.22 ஆயிரம் கோடி வருமானம்

இந்தியாவில் கடந்த 2014-15-ம் நிதியாண்டில் 3,068 தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) ரூ.22 ஆயிரம் கோடிக்கு மேல் வெளி நாட்டு நன்கொடை பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில் மத்திய அரசின் இந்த புள்ளிவிவரம் தரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நன்கொடையாளர் களிடம் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. கடந்த 2013-14-ம் நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து 2,301 தொண்டு நிறுவனங்கள் ரூ.12 ஆயிரம் கோடி நிதி பெற்றன. இது 2014-15-ல் 83.3 சதவீதம் (ரூ.22 ஆயிரம் கோடியாக) அதிகரித் துள்ளது.

இதில் ரூ.7,300 கோடி, அதாவது மொத்த தொகையில் 33 சதவீதம் டெல்லி மற்றும் தமிழ் நாட்டில் உள்ள தொண்டு நிறு வனங்கள் மட்டுமே பெற்றுள்ளன. வேறுவகையில் கூறுவதென்றால் மொத்த தொகையில் 80 சதவீதத்தை டெல்லி, தமிழ்நாட்டு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்கள் பெற்றுள்ளன.

தொண்டு நிறுவனங்கள் வெளி நாட்டு நிதி பெறுவதை ‘வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (எப்சிஆர்ஏ), ஒழுங்குபடுத்துகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி 33,091 தொண்டு நிறுவனங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ளன.

கடந்த 3 ஆண்டுகள் மற்றும் நிகழாண்டில் மொத்தம் ரூ.51 ஆயிரம் கோடி நிதி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்தது.

இதுகுறித்து ‘வாலன்டரி ஆக்-ஷன் நெட்வொர்க் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் மேத்யூ செரியன் கூறும் போது, “டெல்லியில் பல சர்வதேச அறக்கட்டளைகள் பதிவு செய்யப் பட்டுள்ளதால் வெளிநாட்டு நிதி பெறுவதில் இம்மாநிலம் எப்போதும் முதலிடத்தில் உள்ளது. இங்கு வரும் பணம் பிற மாநிலங்களுக்குப் பிரித்து அளிக்கப்படுகிறது. இது போல மும்பையிலும் பல சர்வ தேச அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மகாராஷ்டிர மாநிலத்துக்கும் அதிக நிதி வருகிறது” என்றார்.

2011-12-ம் ஆண்டுக்குப் பிறகு, வெளிநாட்டு நன்கொடை அளித்தவர்கள் மற்றும் பெற்றுக் கொண்டவர்கள் குறித்த விரிவான புள்ளிவிவரம் கிடைக்கவில்லை. 2011-12-ல் தமிழ்நாட்டை சேர்ந்த ‘வேர்ல்டு விஷன் ஆப் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனம் நாட்டில் அதிகபட்சமாக 233.38 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதையடுத்து, கேரளாவின் பிலீவர்ஸ் சர்ச் இந்தியா (ரூ.190.05 கோடி), ஆந்திராவின் ரூரல் டெவலப்மென்ட் ட்ரஸ்ட் (ரூ.144.39 கோடி), டெல்லியின் இரு தொண்டு நிறுவனங்கள் (ரூ.130.77 கோடி, ரூ.130.31 கோடி) நன்கொடை பெற்றுள்ளன.

“மத அடிப்படையிலான அறக் கட்டளைகள் அதிக வெளிநாட்டு நிதி பெறுகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் கிறிஸ்தவ அமைப்புகள் அதிகம் இருப்பதால் இம்மாநிலங்கள் அதிக வெளிநாட்டு பெறுகின்றன” என்கிறார் மேத்யூ செரியன்.

2011-12-ம் ஆண்டில் வெளி நாட்டு நிதி அளித்த நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகியவை முன்னணியில் உள்ளன. 2011-12-ம் ஆண்டின் எப்சிஆர்ஏ அறிக்கையின்படி வெளி நாட்டு நிதியிலிருந்து ஊரக வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் செலவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் நலன், பள்ளி கல்லூரிகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மற்றும் ஆய்வுக்கு அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x