பாஜகவுக்கு ஆதரவு கிடையாது: ஆம் ஆத்மி திட்டவட்டம்

பாஜகவுக்கு ஆதரவு கிடையாது: ஆம் ஆத்மி திட்டவட்டம்
Updated on
2 min read

டெல்லியில் குழப்பம் நீடிக்கும் நிலையில், பாஜகவுக்கோ அல்லது காங்கிரஸுக்கோ ஆதரவு கிடையாது என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்கத் தயாராக இல்லை என்று அக்கட்சி கூறியுள்ளது.

டெல்லியில் இன்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன், பாஜக-வுக்கு நிபந்தனையோடு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இருப்பதாக வெளியான தகவல்களை முற்றிலுமாக மறுத்தார். ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சியாக இருக்கவே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க, பிரச்சினையின் அடிப்படையில் ஆம் ஆத்மி ஆதரவு தருவதற்கு பரிசீலிக்கும் என்று பிரசாந்த் பூஷன் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனால் ஆம் ஆத்மி கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட்டுவிட்டதாக சலசலக்கப்பட்டது.

இது குறித்து பிரஷாந்த் பூஷன் கூறும்போது, "என் கருத்து விவாதக் களத்தில் முன் வைக்கப்பட்டது. அது ஆம் ஆத்மியின் நிலைப்பாடு அல்ல. ஆம் ஆத்மி கட்சி எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்தக் கொள்கையை பாஜக பின்பற்றினால் அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்திருந்தேன். ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை. ஆம் ஆத்மி கட்சியைப் போல் வேறு ஒரு கட்சி உருவாக முடியாது" என்றார் அவர்.

குடியரசுத் தலைவர் ஆட்சி?

டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.

கடந்த டிசம்பர் 4-ல் நடைபெற்ற டெல்லி தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதில், முதலிடம் பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி 32, புதிய கட்சியான ஆம் ஆத்மி 28, கடந்த மூன்று முறையாக ஆட்சி செய்த காங்கிரஸ் 8, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சைக்கு தலா ஒரு இடம் என வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆட்சி அமைக்கத் தேவையான 36 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளபோதிலும், பாஜக ஆட்சி் அமைக்க உரிமை கோரவில்லை.

ஆம் ஆத்மி கட்சியும் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே முடிவெடுத்துள்ளது. மீண்டும் தேர்தல் வந்தால் அதைச் சந்திக்கவும் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறது.

இதனிடையே, ஓர் இடத்தில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி, எவ்வித நிபந்தனையும் இன்றி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராவிட்டால், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு அரசுக்கு பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்காக அளிக்கப்படும் ஆறு மாதகால அவகாசத்தில் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படவும் வாய்ப்புண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in