

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யு.பி.பிருவரிஸ் நிறுவனத்தை இழுத்து மூடுமாறு கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஐ.ஏ.இ நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யு.பி.குரூப் நிறுவனத்துக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், '' விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யு.பி. குரூப் தலைமையில் இயங்கும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக எங்களிடம் ரூ. 153 கோடி கடனாக பெற்றார். இந்த கடனை குறித்த காலத்தில் வட்டியுடன் செலுத்த தவறிவிட்டார். எனவே அவரது நிறுவனத்தை அரசு கொள்முதல் செய்து, எங்களுக்கான பணத்தை திருப்பி செலுத்த வேண்டும்''என முறையிட்டது.
இவ்வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தார்வாட் கிளை நீதிபதி விநீத் கோத்தாரி வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் தீர்ப்பை வெளியிட்டார். அதில், '' அமெரிக்காவை சேர்ந்த ஐ.ஏ.இ நிறுவனத்திடம் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.153 கோடி கடனை திரும்ப செலுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே யு.பி.குரூப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பு.பி.பிருவரிஸ் நிறுவனத்தை கர்நாடக அரசு இழுத்த மூட வேண்டும்''என உத்தரவிட்டார்.
பல்வேறு வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் மல்லையா நாட்டை விட்டு ஓடினார். இதைத் தொடர்ந்து யு.பி.குரூப் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைவில் யு.பி.பிருவரிஸ் நிறுவனத்துக்கு எதிராக தீர்ப்பு வெளியாகியுள்ளதால் விஜய் மல்லையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யுபிஎச்எல் நிறுவனத்தில் மல்லையாவுக்கு 52.34 சதவீத பங்குகள் உள்ளன.
கடந்த வாரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையா ஜாமீனில் வெளிவரமுடியாத வாரன்ட் பிறப்பித்தது. ஐடிபிஐ வங்கியில் பெற்ற ரூ. 720 கோடி தொகையை வசூலிக்க அவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கடன் மீட்பு தீர்ப்பாயம் விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ. 6,203 கோடியை மீட்பதற்கான நடவடிக்கையைத் தொடங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.