

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் மீது 346 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மிக அதிகமாக அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் மீது 105, காங்கிரஸ் மீது 88, பாரதிய ஜனதா மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 42,000 லிட்டர் மது பானங்கள், வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.6 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணத்துக்காக வெளியிடப்பட்ட செய்திகள் அடிப்படையில் 21 வழக்குகள் பதிவாகி உள்ளன.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 65.13 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆண்கள் 65.48 சதவீதம் பேரும் பெண்கள் 64.68 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2008 சட்டமன்றத் தேர்தலில் 57.58 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கு முன்பு 1993-ம் ஆண்டு 61.75 சதவீதம் பதிவான வாக்குகளே அதிகபட்சமாக இருந்தது. அதை முறியடிக்கும் வகையில் இந்த சட்டமன்றத் தேர்தலில் மாலை 5.00 மணிக்கும் மேல் சுமார் 1.7 லட்சம் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.