Published : 07 Jun 2016 09:09 AM
Last Updated : 07 Jun 2016 09:09 AM

சீக்கிய தீவிரவாதிகளை ஒடுக்கிய புளூ ஸ்டார் ஆபரேஷன்- சொல்லப்படாத கதை

'டே அண்ட் நைட்' செய்தி சேனலில் ஆவணப்படம் வெளியீடு

கடந்த 1984 ஜூன் மாதம் பஞ்சாப், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சீக்கிய தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங் களுடன் புகுந்தனர். காலிஸ்தான் தனி நாடு கோரி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையில் அரசுக்கு எதிராக பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.

அதன்பின், ‘புளூ ஸ்டார் ஆபரேஷன்’ என்ற பெயரில் ராணுவம் அதிரடியாக பொற்கோயிலுக்குள் நுழைந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளியது. அதன் 32- ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந் நிலையில், புளூ ஸ்டார் ஆபரேஷனில் உயிர்த் தப்பிய சிலரை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி கண்டு ஆவணப்படம் தயாரித்துள்ளார்.

ஆறு நாட்கள் பொற்கோயிலுக்குள் சீக்கிய தீவிரவாதிகளுக்கும் ராணு வத்துக்கும் என்ன நடந்தது? இதுவரை சொல்லப்படாத உண்மைகள் என்ன என்பது உட்பட பல முக்கிய தகவல்களை அவர் திரட்டி உள்ளார். ‘ஆபரேஷன் புளூ ஸ்டார் - சொல்லப்படாத கதை’ என்ற தலைப்பில் அந்த ஆவணப்படம் தற்போது, சண்டிகரை தலைமையிடமாக கொண்ட ‘டே அண்ட் நைட் நியூஸ்’ சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சேனலை பிரபல பஞ்சாப் பத்தி ரிகையாளர் கன்வர் சந்து நடத்தி வருகிறார்.

தனது சேனல் மூலம் தீவிரவாதி களுக்கும் ராணுவத்துக்கும் நடந்த சம்பவங்களை புதிய ஆதாரங்கள் மூலம் வெளியிட்டு வருகிறார். ஆவணப் படத்தில் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் பல்வந்த் சிங் ரமூவாலியா பல திடுக்கிடும் தகவல்களை வெளி யிட்டுள்ளார். புளூ ஸ்டார் ஆபரேஷன் நடந்தபோது, ரமூவாலியா ஷிரோன்மணி அகாலி தள உறுப்பினராக இருந்தவர். அப்போது அகாலி தள தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவால், ஷிரோன் மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவர் குர்சரண் சிங் டோராவுடன் இருந்துள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி மாலை 6 மணிக்கு பொற்கோயிலில் என்ன நடந்தது என்பதை ரமூவாலியா விவரித்துள்ளார். ரமூ வாலியா கூறியுள்ளதாவது:

ஜூன் 5-ம் தேதி மாலை 6 மணிக்கு 5 சீக்கிய இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த லோங்கோவால் மற்றும் டோராவை துப்பாக்கி முனையில் நிற்க வைத்தனர். ‘காலிஸ்தான் தனி நாடு உருவாக்கப்பட்டு விட்டது’ என்று அறிவியுங்கள் என்று அவர்களை மிரட்டினர்.

அவர்கள் ‘டிரான்ஸ்மிட்டர்’ பெட்டி ஒன்றையும் எடுத்து வந்திருந்தனர். அதை காட்டி, ‘பாகிஸ்தானில் ஜெனரல் ஜியா உல் ஹக்குடன் இந்த டிரான்ஸ் மிட்டர் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் காலிஸ்தான் நாடு உருவாகி விட்டதாக அறிவித்தால், உடனே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கும்’ என்று அந்த சீக்கிய இளைஞர்கள் மிரட்டினர்.

ஆனால், அந்த இளைஞர்களிடம் டோரா பேசினார். ‘‘இந்த சண்டை பிந்த ரன்வாலேவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையிலானது. இந்த சண்டையை பிந்தரன்வாலே தலைமையேற்று நடத்து வதால், காலிஸ்தான் நாடு உருவாகி விட்டதாக அவரையே அறிவிக்க சொல் லுங்கள்’’ என்று டோரா துணிச்சலாக கூறினார்.

அகாலி தள தலைவர்களை வரலாறு எப்படி எடை போடும் என்று எனக்கு தெரியாது. ஆனால், உண்மை இதுதான். அதன்பின் அந்த 5 சீக்கிய இளைஞர்களும் சென்று விட்டனர். அதன்பிறகு அவர்கள் திரும்பி வரவில்லை. இவ்வாறு ரமூவாலியா கூறியுள்ளார்.

புளூ ஸ்டார் ஆபரேஷன் நடந்த போது 30 சீக்கிய இளைஞர்களை வரிசையாக நிற்க வைத்து ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து ரமூவாலியா மேலும் கூறி யுள்ளதாவது:

ஜூன் 6-ம் தேதி அதிகாலை பொற் கோயில் வளாகத்துக்குள் ராணுவத்தி னர் ஒவ்வொரு பகுதியாக தீவிரவாதி களை சல்லடை போட்டு தேடிக் கொண் டிருந்தனர். ‘9 குமாவோன் ரெஜி மென்ட்’டை சேர்ந்த மேஜர், சுமார் 20 சீக்கிய இளைஞர்களை வரிசையாக நிற்க வைத்து இயந்திர துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்.

அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த ரமூவாலியா, ‘‘சிறை பிடிக்கப்பட்ட சீக்கிய இளைஞர்கள் காஷ்மீரை சேர்ந்த வர்கள் போல் இருந்தனர். பஞ்சாப் சீக்கியர்கள் போல் அவர்கள் இல்லை. ஒரு அதிகாரி கைக்குட்டையை ஆட்டி சிக்னல் கொடுத்தார். உடனடியாக சீக்கிய இளைஞர்களை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

ராணுவ வீரர்கள் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். வெறி கொண்டிருந்தனர். பொற்கோயிலுக்குள் நடந்த சண் டையில் சக ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டதால் அப்படி அவர்கள் இருந்திருக்கலாம். இந்த சம்பவம் எல்லாம் அதிகாலை 3 மணி முதல் 3.30 மணிக்குள் நடந்து முடிந்தது. அதன்பிறகு அங்கிருந்த மற்ற சீக்கியர்களை கொல்வதற்காக ராணுவ வீரர்கள் வரிசையாக நிற்க வைத்தனர். என்னையும் கீழே உட்கார உத்தர விட்டனர். நான் பயத்தில் பிரார்த்தனை செய்தேன். திடீரென நான் நாடாளுமன்ற மக்களவை முன்னாள் எம்.பி. என்பதற் கான அடையாள அட்டையை பாக் கெட்டில் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது.

அவசரமாக அடையாள அட்டையை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘நான்தான் ரமூவாலியா, லோக் சபா முன்னாள் எம்.பி’ என்று கத்தி னேன். நானும் உங்கள் பிடியில் உள்ள இந்த சீக்கியர்களும் லோங் கோவாலின் உறுப்பினர்கள். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. எங்களுக் கும் இந்த சண்டைக்கும் தொடர்பு இல்லை. அகாலி தளத்தின் அமைதி மோர்ச்சாவுக்காக இங்கு நாங்கள் வந்தோம்’ என்று தொடர்ந்து சத்தமாக கூறினேன்.

அதை கேட்ட ராணுவ அதிகாரி, ‘உன் பெயர் என்ன’ என்று கேட்டார். ‘ரமூவாலியா’ என்று கூறினேன். அதே கேள்வியை திரும்பவும் கேட்டார். நான் பதில் சொன்னேன். ‘‘நான் பொய் சொல்லவில்லை. உங்களை திசை திருப்பவில்லை. இந்த அடையாள அட் டையை பாருங்கள்’’ என்றேன். இரண்டு மூன்று வீரர்கள் என்னருகில் வந்து ஒரு பக்கமாக தள்ளினர். அப்போது, ‘‘நீங்கள் உண்மையிலேயே ரமூவாலியாவா?’’ என்று அதிகாரி கேட்டார்.

‘‘ஆமாம் நான் ரமூவாலியாதான்’’ என்றேன். அதை கேட்ட அதிகாரி, ‘‘நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள். நீங்கள் இங்கு இருக்க கூடாதே? நீங்கள் லோங்கோவாலுடன்தானே இருக்க வேண்டும்’’ என்று கேட்டார். உடனே, ‘‘லோங்கோவால் அடுத்த அறையில் இருக்கிறார். நான் சும்மா வெளியில் வந்தேன்’’ என்றேன்.

இவ்வாறு அந்த ஆவணப்படத்தில் ரமூவாலியா கூறியுள்ளார்.

இதேபோன்ற சம்பவத்தை அப் போதைய ஷிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி செயலாளர் பான் சிங்கும் தன்னிடம் கூறியதாக பிரி கேடியர் (ஓய்வு) ஓங்கார் சிங் கோரா யாவும் உறுதிப்படுத்தி உள்ளார்.

பொற்கோயில் வளாகத்துக்குள் சுவர் அருகில் சீக்கிய இளைஞர்கள் சிலரை நிற்க வைத்து சரமாரியாக ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக பான் சிங் தன்னிடம் கூறினார் என்று ஓங்கார் சிங் கூறியுள்ளார்.

பிந்தரன்வாலேவுடன் சேர்ந்து நாட்டுக்கு எதிராக செயல்பட்ட ராணுவ மேஜர் ஜெனரல் ஷாபெக் சிங் (ஓய்வு) பற்றியும் ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. ஜூன் 6-ம் தேதி உண்மையான புளூ ஸ்டார் ஆபரேஷன் தொடங்குவதற்கு முந்தைய நாள் 5-ம் தேதி சிறப்பு பயிற்சி பெற்ற ராணுவ வீரரால் ஷாபெக் சிங் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் வங்க தேச போரின்போது சிறப்பாக செயல் பட்டதற்காக மத்திய அரசிடம் விருது வாங்கியவர்.

ஆனால், ஊழல்குற்றச்சாட்டின் கீழ் பதவி நீக்கப்பட்டார் அந்த அதிருப்தியில் பிந்தரன் வாலேவுடன் சேர்ந்து போர் பயிற்சி அளித்துள்ளார். இத்தகவலை பிந்தரன் வாலேவின் நெருங்கிய நண்பராக இருந்து பல்வீந்தர் சிங் என்பவர் தெரி வித்துள்ளார். புளூ ஸ்டார் ஆபரேஷனில் இருந்து இவர் உயிர் தப்பியவர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்தவுடன் ஷாபெக் சிங்கை அகால் தக்த் கீழ்தளத்துக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு பிந்தரன்வாலே மடியிலேயே ஷாபெக் உயிரிழந்ததாக ஆவணப்படம் கூறுகிறது. ஒரு நாள் முழுக்க அவரது உடல் துணியால் மூடப்பட்டு கிடந்தது. மறுநாள் ராணுவ வீரர்கள் உள்ளே புகுந்த பிறகுதான், ஷாபெக் பலியானது தெரிய வந்துள்ளது.

ஜூன் 6-ம் தேதி காலை 8.45 மணிக்கு குரு ராம் தாஸை வணங்க ‘தர்ஷினி தியோதி’க்கு பிந்தரன்வாலே சென்று கொண்டிருந்தபோது ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். ஆனால், பிந்தரன் வாலேவின் உடலை அவரது சகோதரர் மேஜர் ஹர்சரண் சிங்ரோத் அடையாளம் காட்டவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால், டாக்டர்களும் போலீஸாரும் அவர் அடையாளம் காட்டியதாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ரோத் கூறும்போது, ‘‘நான் எந்த முரண்பட்ட தகவலையும் வெளியிடவில்லை. என் சகோதரரின் உடலை பார்த்தேன். இறுதி அஞ்சலி செலுத்தினேன்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x