Published : 25 Aug 2015 04:54 PM
Last Updated : 25 Aug 2015 04:54 PM

பெங்களூரு மாநகராட்சி மீண்டும் பாஜக வசம்: ஹாட்ரிக் தேர்தல் வெற்றியால் மோடி பெருமிதம்

கர்நாடக மாநில தலைநகரமான‌ பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பெங்களூர் மாநகராட்சியைத் தக்க வைத்துக் கொண்டதை, பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறது கர்நாடக பாஜக.

இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, இதை ஹாட்ரிக் வெற்றி என வருணித்து பெருமிதத்தைப் பதிவு செய்துள்ளார்.

198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், அதிமுக, சுயேட்சைகள் என 1,120 பேர் களம் கண்டனர். இதில் ஹொங்க சந்திரா வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, மீதமுள்ள 197 வார்டுகளில் நடத்த தேர்தல் நடைபெற்றது. சுமார் 78 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு சதவீதம் 40-ஐ கடந்தது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் 44 சதவீத‌ வாக்குகள் மட்டுமே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று காலை தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்து, பெங்களூரு மாநகராட்சியை மீண்டும் தன்வசப்படுத்தியது.

பாஜக 100 இடங்களிலும், காங்கிரஸ் 75 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 14 இடங்களிலும், இதர கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வீழ்ச்சி கண்ட நிலையில், தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

மோடி பெருமிதம்:

பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் வெற்றி குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, "பெங்களூருவுக்கு நன்றி! கர்நாடக மக்களுக்கு நன்றி. பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்காக, கர்நாடக பாஜக தலைவர்களுக்கும் தொண்டர்களும் வாழ்த்துகள்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானைத் தொடர்ந்து, பெங்களூரு மாநகராட்சியில் பாஜகவுக்கு கிட்டியிருப்பது முழுமையான ஹாட்ரிக் வெற்றி. வளர்ச்சி மற்றும் நல்ல நிர்வாக அரசியலுக்குக் கிடைத்த வெற்றி இது.

பாஜக மீதான மக்கள் தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கையையே இது காட்டுகிறது. 125 கோடி இந்தியர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்" என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x