

பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு நிர்வாகமே பொறுப்பு என மக்களவை சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
சமூக மாற்றம் தேவை:
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதை விட சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
பெண்கள் எந்த வேலை பார்த்தாலும், அவர்கள் பணியாற்றும் இடத்தில் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். அதற்கு, நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் பெண்கள் தங்களுக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அதனைப் பற்றி தெரிவிக்க புகார் மையம் நிறுவப்பட்டுள்ளது. அதனைப் போல் ஒவ்வொரு நிறுவனமும் பெண்களுக்காக குறை தீர் மையம் அமைக்க வேண்டும் என்றார்.
பெண்கள் காவியங்களிலும், இதிகாசங்களிலும், கதைகளிலும் உயர் நிலையில் வைத்துக் கொண்டாடப் படுகின்றனர் ஆனால் இயல்பில் அவள் சிறுமைப் படுத்தப்படுகிறாள். பெண்ணின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது.பெண்கள் மேம்பட கல்வி மிகவும் அவசியமானது என்றார்.
தெஹல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இவ்விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்றார்.