பெங்களூருவில் இருந்து 2 சிறப்பு ரயில்கள் இயக்க கேரளா கோரிக்கை

பெங்களூருவில் இருந்து 2 சிறப்பு ரயில்கள் இயக்க கேரளா கோரிக்கை
Updated on
1 min read

'பெங்களூருவில் வசிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து பாதுகாப்புடன் வந்துசேரும் வகையில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்' என்று ரயில்வே அமைச்சகத்திடம் கேரள அரசு கோரியுள்ளது.

தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (திங்கள்கிழமை) புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், வன்முறை வெடித்தது. இதனால் பெங்களூருவில் வசிக்கும் தங்கள் மாநிலத்தவர்களை கேரளாவுக்கு பாதுகாப்பாகத் திரும்பி ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இரண்டு சிறப்பு ரயில்களை விடவேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரயில்வே அமைச்சரிடம் பேசிய பின்னர் அவர் கூறும்போது, ''ஓணம் பண்டிகைக்கு கேரளம் திரும்பும் வகையில் பலர், பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இப்போதைய சூழலில் அவை பாதுகாப்பில்லை. எனவே கன்னூர் மற்றும் திருவனந்தபுரத்துக்கு வந்துசேரும் வகையில் பெங்களூருவில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்களை இயக்கக் கேட்டிருக்கிறோம். ரயில்வே அமைச்சரும் எங்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் தவிர, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, வி.எம். சுதீரன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் கர்நாடக முதல்வரிடம் மலையாளிகளின் பாதுகாப்பு குறித்தும், அவர்களை அனுப்ப சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கேரள காவல்துறை, மலையாளிகள் கேரளத்துக்குத் திரும்பப் பயணிக்கும் சாலைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கர்நாடகாவின் மாண்டியாவுக்கு, 100 காவலர்களை அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in