Last Updated : 05 Jun, 2016 12:13 PM

 

Published : 05 Jun 2016 12:13 PM
Last Updated : 05 Jun 2016 12:13 PM

எஸ்மா சட்டம் பாயும் என எச்சரித்ததால் கர்நாடகாவில் போலீஸ் போராட்டம் முடங்கியது: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

கர்நாடகாவில் நேற்று நடைபெற இருந்த போலீஸாரின் மாநிலம் தழுவிய போராட்டத்தை, முதல்வர் சித்தராமையா எஸ்மா சட்டம் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார். இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கர்நாடக மாநில போலீஸார் ஊதிய உயர்வு, பணி நேரம் குறைப்பு, போதிய ஓய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய‌ அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அகில கர்நாடகா மகா சங்கத்தின் தலைவர் ஷசிதர் வேணுகோபால், உழைக்கும் போலீஸ் குடும்பங்களின் நல அமைப்பின் தலைவர் பசவராஜ் ஆகியோர் மேற்கொண்டனர்.

எதிர்க்கட்சிகளான பாஜக, மஜத, கம்யூனிஸ்ட், கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போலீ ஸாரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும், வணிக சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களும் போலீஸாரின் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் இருந்து இந்த போராட்டத்தில் 50 ஆயிரம் பேர் பங்கேற்ககூடும் என அரசுக்கு உளவுத் துறை எச்சரித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா போலீஸாரின் போராட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக உயர்நிலை குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

தவிர, போராட்டத்தை தூண்டிய அகில கர்நாடக போலீஸ் மகா சங்கத்தின் தலைவர் ஷசிதர் வேணுகோபால், உழைக்கும் போலீஸ் குடும்பங்களின் நல அமைப்பின் தலைவர் பசவராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டன‌ர்.

பலத்த கண்காணிப்பு

போலீஸாரின் போராட்டத்தை தடுத்து நிறுத்த 13 ஆயிரம் சி.ஆர்.பி.எப் படையினரும், 11 ஆயிரம் ஊர் காவல் படையினரும் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக திட்டமிட்ட போராட்டத்தை போலீஸார் கைவிட்டு, வழக்கம் போல அவரவர் பணிக்குச் சென்றனர்.

நூறு சதவீத வருகைப் பதிவை உறுதி செய்யும் வகையில் கர்நாடகாவில் அனைத்து காவல் நிலைய‌ங்களில் இருந்தும் பணிக்கு வந்துள்ள போலீஸாரின் புகைப்படம் எடுக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் போலீ ஸாரின் போராட்டம் முற்றிலுமாக முடங்கியது.கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சித்தராமையா நன்றி

இதற்கிடையில் போராட்டத்தை கைவிட்ட போலீஸாருக்கு முதல்வர் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x