

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய துல்லியமான தகவலை தெரிவிக்குமாறு கருப்பு பணம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று முறை யான அறிவிக்கையை எஸ்ஐடி வெளியிட்டுள்ளது. அதில் கூறி யிருப்பதாவது: வெளிநாடுகளில் சட்டவிரோதமாகவோ ரகசிய மாகவோ வங்கிக் கணக்கு அல் லது சொத்து வைத்திருக்கும் இந்தியர்கள் (தனி நபர், ஹிந்து பிரிக்கப்படாத குடும்பம், சங்கம், நிறுவனம், அறக்கட்டளை இன்னும் பிற) பற்றிய உறுதியான தகவல் தெரிந்த நபர்கள் (தனி நபர், சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிற நிறுவனங்கள்) அதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இதுபோன்ற வங்கிக் கணக்கு கள் அல்லது சொத்துகளிலிருந்து வட்டியோ, வருமானமோ பெறுபவர்கள் பற்றியும் தகவல் தரலாம்.
அதேநேரம், கருப்பு பணம் பதுக்கியவரின் பெயர், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, பாஸ்போர்ட், சட்டவிரோத சொத்து பற்றிய விவரம், கைவசம் உள்ள ஆவணங்கள் ஆகியவற்றை, இணை செயலாளர் (உறுப்பினர் செயலாளர் எஸ்ஐடி) வருமான வரித் துறை, நார்த் பிளாக், புதுடெல்லி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமோ sit_rev@nic.in என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம். துல்லியமான, போதுமான விவரம் இல்லாத புகார்கள் நிராகரிக்கப்படும்.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தருபவர்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.