Last Updated : 19 Oct, 2013 09:18 AM

 

Published : 19 Oct 2013 09:18 AM
Last Updated : 19 Oct 2013 09:18 AM

உ.பி.யில் தொடங்கியது தங்கப் புதையல் வேட்டை- நனவாகுமா சாது கண்ட ஆயிரம் டன் தங்கக் கனவு?

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் வெள்ளிக்கிழமை துவங்கியது ஆயிரம் டன் தங்கத்தைத் தேடும் வேட்டை.

உ.பி. தலைநகர் லக்னௌவிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது உன்னாவ். அதன் எல்லைப்புறம் உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் டோண்டியா கேடா எனும் கிராமத்தில் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் எனும் அரசரின் கோட்டை இருந்தது. தற்போது சிதிலமடைந்த நிலையில் இருக்கும் அங்கு பகலிலும் பொதுமக்கள் செல்வது கிடையாது.

சாது கண்ட கனவு:

இந்நிலையில், அந்தப் பகுதியில் புராதன சிவன் கோயிலில் தினமும் பூஜை செய்து வரும் சாதுவான ஷோபன் சர்கார் என்பவர் கடந்த மாதம் ஒரு கனவு கண்டாராம். அதை குறிப்பிட்டு உபி முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதினார். அவரது பக்தர்களில் ஒருவரான மத்திய இணை அமைச்சர் சந்திரதாஸ் மஹந்திடமும் தன் கனவு பற்றிக் கூறியிருந்தார். இதை தொடர்ந்து உணவு மற்றும் வேளாண்மை துறையை சேர்ந்த அவர் கோட்டைப் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

இது குறித்த சாது ஷோபன் சர்காரின் முக்கிய சீடரான சாது ஓம்ஜி பேசுகையில், "இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னரான ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங்கின் ஆவி, அவரது சிதிலமடைந்த கோட்டையை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆவிதான் எங்கள் குருவான சுவாமி மஹராஜ் ஷோபன் சர்கார் கனவிலும் வந்தது.

கோட்டையில் ஆயிரம் டன் எடைக்கும் அதிகமான அளவில் தங்கப்புதையலை தான் புதைத்து வைத்ததாகவும், அதைத் தோண்டி எடுத்து பொதுமக்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளும்படியும் மறைந்த அரசர் கனவில் வேண்டினாராம். தற்போது, இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. அதைச் சீர்படுத்த இந்தப் புதையல் உதவும்" என்றும் கூறியுள்ளார்.

இப்போது இந்தக் கோட்டைப் பகுதியில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் உத்தரப் பிரதேச மாநில அலுவலகக் குழு, ஒரு வாரமாக முகாமிட்டிருக்கிறது. இவர்களுக்கு உதவியாக தேசிய புவியியல் ஆய்வகத்தின் ஒரு குழு, மண்ணுக்கு அடியில் புதையல் இருக்கும் இடத்தை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த அகழ்வாய்வுக்கு முன் அங்குள்ள புராதன சிவன் கோயி லில் சாது ஷோபன் சர்கார், ஒரு மணி நேரம் சிறப்பு பூஜை நடத்தினார்.

இருப்பது தங்கம்தானா?

அகழ்வாய்வுப் பணி பற்றி தொல்பொருள் ஆய்வு அதிகாரி எஸ்.பி சுக்லா கூறுகையில், "புவியியல் ஆய்வக கருவிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த மண்ணின் உள்ளே மூன்று இடங்களில் கடினமான பொருள்கள், சுமார் 25 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், அது தங்கம்தானா என்று தெரியாது. பத்துக்கு பத்து அடிகளில் குழிகளை பொறுமையாக வெட்டி முடிக்க பல மாதங்கள் பிடிக்கும்" என்றார்.

புதையலின் வரலாறு

19 ஆம் நூற்றாண்டில் உன்னாவை தலைநகராகக் கொண்டு இந்தப் பகுதியை ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஆங்கிலேயர்களை எதிர்த்து 1857-ல் சிப்பாய்க் கலகம் வெடித்தது.

அப்போது ராஜா ராவ், தன்னிடம் இருந்த கஜானாவின் தங்க நகைகளை அவரது கோட்டை பகுதியில் புதைத்து வைத்ததாகக் கருதப்படுகிறது.

இது பற்றி் டோண்டியா கேடா கிராமவாசிகளுள் ஒருவரான ராம் மனோகர் பாண்டே நம்மிடம் கூறுகையில், "இதில், ராஜா ராவுடையது சேர்த்து, அவருக்கு சுற்றுப் பகுதியில் ஆண்ட மன்னர்களின் தங்கப்புதையலும் உள்ளது. விதுர் பகுதியை ஆண்ட ஞானாராவ் பேஷ்வா, ராணி லக்ஷ்மி பாய் ஆகியோரும் ஆங்கிலேயருக்கு பயந்து தம் கஜானாக்களின் தங்க நகைகளை ராஜா ராவிடம் பாதுகாக்கும்படி கொடுத்து வைத்தனர் '' என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ்வில் நடந்து வரும் தங்கப் புதையல் வேட்டையை கண்காணிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா தாக்கல் செய்த இந்த பொது நல மனுவை தலைமை நீதிபதி் பி.சதாசிவம் வெள்ளிக்கிழமை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x