Last Updated : 18 Aug, 2016 03:37 PM

 

Published : 18 Aug 2016 03:37 PM
Last Updated : 18 Aug 2016 03:37 PM

பலுசிஸ்தான் நிலைப்பாட்டில் இந்தியாவுக்கு வங்கதேசம் ஆதரவு

பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.

மேலும் பலுசிஸ்தானில் மனித உரிமைகளை மீறும் பாகிஸ்தான் மீது வங்கதேச அரசாங்கம் விரைவில் கொள்கை அறிவிப்பு தீர்மானத்தை எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பினார். பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மோடியின் பலுசிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டுக்கு பலுசிஸ்தானின் பலூச் தேச இயக்கம் தலைவர்கள் வரவேற்றதுடன் இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு அந்நாட்டைப் பொறுப்பாளியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) இந்தியா வந்த வங்கதேச அமைச்சர் ஹசானுல் ஹயு இனு பலுசிஸ்தான் விவகாரம் தொடர்பாக ‘தி இந்து’ விடம் கூறும்போது,

“தற்போது பாகிஸ்தான் பலுசிஸ்தான் மீது ஏவிய அடக்குமுறைக்கான சுமைகளை சுமந்து வருகிறது. வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்கு முன்னதாக பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வங்காள மக்கள் துன்புறுத்தப்பட்டனர்.

பாகிஸ்தான் தனது மக்களுக்கு எதிராகவே மோசமான வரலாற்றை கொண்டுள்ளது. 1971 நடந்த போரின் தோல்வியிலிருந்து பாகிஸ்தான் ஒன்றுமே கற்று கொள்ளவில்லை.

மேலும் தெற்காசிய பகுதிகளில் எல்லை மீறல் நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

வங்கதேசம் தொடர்ந்து பலுசிஸ்தான் மக்களின் விடுதலைக்கு ஆதரவாக இருக்கும். இது தொடர்பாக விரைவில் பலுசிஸ்தானை ஆதரித்து முக்கிய கொள்கை ஒன்றை வெளியிடவுள்ளோம்” என்றார்.

முக்கிய சந்திப்பு

ஹசானுல் ஹயு இனு மூன்று நாட்கள் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரது சுற்றுபயணத்தில் முக்கிய அங்கமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்திக்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x