

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியாகவும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “இது கொள்கை முடிவு. அரசுதான் எடுக்க வேண்டும். அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதிகார வரம்பை மீறியது. இதுபோன்ற முடிவுகளை அரசு நிர்வாகம், சட்டமன்றங்களிடமே விட்டுவிட வேண்டும்” என்று கூறியுள்ளனர்.