Published : 06 Aug 2016 06:02 PM
Last Updated : 06 Aug 2016 06:02 PM

காஷ்மீரில் ஓயாத மோதல்கள்: பல இடங்களில் ஊரடங்கு நீடிப்பு; 29-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புர்ஹான் வானி என்கவுன்ட்டரைத் தொடர்ந்து காஷ்மீரில் மோதல்கள் இன்னும் ஓயவில்லை. மீண்டும் அனந்த்நாக், ஷோபியான் பகுதிகளில் மோதல் வெடித்தது. பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இன்னமும் கூட இயல்புநிலை திரும்பவில்லை.

பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் வெள்ளிக்கிழமை 3 பேர் பலியானதையடுத்து, காஷ்மீரின் பல பகுதிகளில் மீண்டும் 29-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் பலியான 24 வயது சமீர் அகமது வானி என்ற நபரின் இறுதிச் சடங்குக்கு கட்டுப்பாடுகளையும் மீறி பலரும் கலந்து கொண்டனர். சமீர் அகமது வானி பத்காம் மாவட்டத்தில் கான்சாஹிப் என்ற இடத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்.

பலியான மற்றொரு இளைஞர் டேனிஷ் ரசூலின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இவர் பாரமுல்லா மாவட்ட சோபோர் பகுதியில் பெல்லட் துப்பாக்கிச் சூட்டில் பலியானார், இவரது உடல் இவரது சொந்த கிராமத்தில் இன்று காலை புதைக்கப்பட்டது.

அனந்த்நாக் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஆர்பாட்டக்காரர்கள் சிலர் இன்று காயமடைந்தனர். 7 பெண்களுக்கும் பெல்லட் தோட்டா காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதில் அரசை எதிர்த்து ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ஆர்பாட்டக்காரர்களை துரத்திச் சென்றனர். இங்கும் பேரணிக்காக மக்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை நடந்த ஆர்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால் வேறு சில தகவல்களோ 400 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கின்றன. புர்ஹான் வானி என்கவுன்ட்டருக்குப் பிறகே 5,500 பேர் காயமடைந்துள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது.

சிபிஎம் கட்சி தலைவர் மொகமது யூசுப் தாரிகமி கூறும்போது, “காஷ்மீரில் சமீபத்திய கொலைகளும், இதற்கு நிர்வாகம் எடுக்கும் பதில் நடவடிக்கைகளும் அலையலையாக எழும் போராட்டங்களுக்கு அரசின் அராஜகமான, மனிதத்தன்மையற்ற போக்குகளையே எடுத்தியம்புகிறது.

நாட்டின் அனைத்து ஜனநாயகச் சக்திகளும் இந்த அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். பிரதமர் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார், இது அறியாமையா, இல்லை அராஜகமா?” என்று கடுமையாகக் கூறினார்.

முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும், “இருதயம் உடைகிறது, கவலை அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு இது செல்லும் போது மத்திய அரசும் பிரதமரும் விழித்துக் கொள்ளும்?” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x