

கர்நாடகத்தில் சாலை விதியை மீறிய அமைச்சரின் காரை மறித்து பெங்களூர் போக்குவரத்து போலீஸார் அபராதம் வசூலித்தனர். டிராபிக் போலீஸாரின் இந்த செயலுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
கர்நாடக மாநில உள்துறை அமைச்சராக இருக்கும் கே.ஜே.ஜார்ஜ் தனது குடும்பத்தினருடன் பெங்களூர் எம்.ஜி.சாலையில் தனது விலை உயர்ந்த ஆடி காரில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார். வேகமாக சென்று கொண்டிருந்த அந்தக் காரை போக்குவரத்து போலீஸார் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜார்ஜ், சாலையின் ஓரமாக காரை நிறுத்தி னார்.
காரின் பதிவெண்ணை தங்களின் பிளக்பெர்ரி மெஷினில் அழுத்தி, ‘இதற்கு முன்னர் இந்த கார் வேறு எங்கேயாவது போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருக்கிறதா?' என போலீஸார் பரிசோதித்தனர். அப்போது அந்த கார் இரண்டு முறை சாலை விதிகளை மீறியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, வாகனத்தை ஓட்டி வந்த ஜார்ஜை கீழே இறங்கச் சொல்லி 1,500 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
‘நான் அமைச்சர் என்றும் பாராமல் கடமையை செய்த உங்களைப் பாரட்டுகிறேன். இது எனது சொந்த கார் என்பதால் பிடித்துள்ளீர்கள். அதேபோல என்னுடைய அலுவலக காரும் போக்குவரத்து விதிகளை மீறினால், நீங்கள் கடமையைச் செய்ய வேண்டும்' என டிராபிக் போலீசாரிடம் ஜார்ஜ் தெரிவித்தார்.