

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவை மரபுகள் குறைந்து வருவதாக கவலை தெரிவித்துள்ள அதிகாரிகள் வட்டாரம், அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற இரு அவைகளின் அதிகாரிகள் வட்டாரம் 'தி இந்து'விடம் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில பிரச்சினையில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதும் பின்னர் அவைக்கு வெளியே வந்ததும் அதை மறந்து நட்பு பாராட்டுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தெலங்கானா மசோதா விவகாரத்தில் அதிக அளவில் எல்லை மீறப்பட்டுள்ளன. இது தங்களது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்யும் இடமே தவிர, வன்முறைக் களம் அல்ல" என்றனர்.
அவை மரபுகளை சரியாக தெரிந்து கொள்ளாததன் விளைவுதான் இது எனவும் இவை மூத்த உறுப்பினர்களின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் செய்யப்படுபவை எனவும் புகார் தெரிவித்தனர்.
இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் களுக்கு அவை மரபுகளை பாதுகாப்பது குறித்து முறையான பயிற்சி அளிப்பது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த புதன்கிழமை மாநிலங்கள வையில், அவையின் செயலாளர் ஷம்ஷெர் கே.ஷெரிப் தெலங்கானா மசோதா குறித்த அறிக்கையைப் படிக்க முயன்றபோது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்பி சி.எம்.ரமேஷ் பலவந்தமாக பிடுங்க முயற்சித்தார். வழக்கமாக சபாநாயகர் அல்லது சக உறுப்பினர்களிடம் காட்டப்படும் இதுபோன்ற எதிர்ப்புகள், அதன் அதிகாரிகளிடம் காட்டப்பட் டதற்கு கண்டனமும் எழுந்தது.
ஷெரீப் பின்னணி
கடந்த அக்டோபர் 2012-ல் மாநிலங்களவை செயலாளராக பொறுப்பேற்ற ஷெரீப், இதற்கு முன் இரண்டுமுறை குடியரசு துணைத்தலைவரின் செயலாளராக இருந்தவர். அந்தமான் நிக்கோபர் நிர்வாகத்தின் தலைமைச் செயலாளராகவும் மத்திய அரசின் பல்வேறு துறைக ளின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த இவர், ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர். அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினரால் துன்புறுத்தப்பட்டது இதுவே முதன்முறை. இவரை துன்புறுத்திய தெலுங்குதேசம் கட்சியின் எம்பி ரமேஷ், நாடாளு மன்ற விதிமுறைகள் குழுவின் உறுப்பினராக இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.
ரகளை செய்த சி.எம். ரமேஷின் பின்னணி:
மாநிலங்களவையில் மிகவும் இளம்வயது எம்.பி.யான சி.எம். ரமேஷ் (47), தெலுங்கு தேசம் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆவார்.
சந்திரபாபு நாயுடுவின் நம்பிக்கைக்கு பாத்திரமான இவர், ஆந்திராவின் பிரபல தொழிலதிபர் ஆவார். கடந்த 2012-ம் ஆண்டு மே 10-ம் தேதி, மாநிலங்களவை எம்பி யாக பொறுப்பேற்றார். பல நிறுவனங்களுக்கு அதிபரான இவர், அதிகாரபூர்வமாக ரூ. 175 கோடி சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார்.
ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவை மாநிலங்க ளவையில் தாக்கல் செய்தபோது இவர் ஆவணங்களைப் பிடுங்க முயற்சி செய்தார். இறுதியில் தனது செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.