

பத்திரிகையாளர் ஜே டே கொலை வழக்கு தொடர்பாக, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜனிடம் விசாரிக்க மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி மும்பையின் பூவை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஜே டேவை மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் டே பலியானார். இதில் சோட்டா ராஜனுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு வழக்கு களில் தேடப்பட்டு வந்தவரும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முன்னாள் உதவியாளருமான சோட்டா ராஜன், இன்டர்போல் உதவியுடன் கடந்த அக்டோபர் 25-ம் தேதி இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
ஜே டே கொலை வழக்கு உட்பட ராஜனுக்கு எதிரான சுமார் 70 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை மகாராஷ்டிர அரசு சிபிஐக்கு வழங்கி உள்ளது. இந்நிலையில், ஜே டே கொலை வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக ராஜனிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, வரும் 27 முதல் 10 நாட்களுக்கு விசாரணை நடத்த நீதிபதி பன்சாரே சிபிஐ.க்கு அனுமதி வழங்கினார். மேலும் இந்த வழக்கை பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி ஏ.எல்.பன்சாரே முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது ராஜன் கூறும்போது, “ஜே டே கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டேன். ஆனால் நான் பாதுகாப்பு மிகுந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், இதைப் படித்துப் பார்த்து பதில் அளிக்கவும் எனது சார்பில் ஆஜராக மும்பை வழக்கறிஞரை நியமிக்கவும் 15 நாட்கள் முதல் 1 மாதம் வரை அவகாசம் வேண்டும்” என்றார். இதைக் கேட்ட நீதிபதி உங்கள் (ராஜன்) தரப்பு வழக்கறிஞர் அன்ஷுமன் சின்ஹா நீதிமன்றத்தில்தான் உள்ளார் என்றார்.