Published : 20 Sep 2013 06:47 PM
Last Updated : 20 Sep 2013 06:47 PM

முசாபர்நகர் கலவரம்: பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் ராணா கைது

முசாபர்நகர் கலவரம் தொடர்பாக, உத்தரப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேஷ் ராணாவை, அம்மாநில காவல்துறை வெள்ளிக்கிழமை கைது செய்தது.

நாடு தழுவிய அளவில் கவனத்தை ஈர்த்த முசாபர்நகர் கலவரம் தொடர்பான விவகாரத்தில், அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது, மிக முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் தானா பவனில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வான சுரேஷ் ராணா லக்னோவில் கைது செய்யப்பட்டார். கலவரத்தைத் தூண்டுவதற்காக வெறுக்கத்தக்க வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டவுடனே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.

முசாபர்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், ராணா உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும், அவரை நீதிமன்றத்தில் லக்னோ போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. விஸ்வகர்மா தெரிவித்தார்.

முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில், 47 பேர் கொல்லப்பட்டதும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x