

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்த தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, மத்திய இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக படிப்பு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பிஹெச்.டி படித்து வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)அமைப்பு மாணவர்களுக்கும், ரோஹித் வெமுலா சார்ந்திருந்த அமைப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ரோஹித் வெமுலா உட்பட 5 மாணவர்களை பல் கலைக்கழகத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக விடுதியிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, இவ்விவகாரம் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதினார். 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து சில மாணவர் அமைப்புகள் போராடின. அதற்கு எதிராக ஏபிவிபி அமைப்பு செயல்பட்டது. எனவே, ஏபிவிபிக்கு ஆதரவாகவும் ‘தேசவிரோத நடவடிக்கை’யில் ஈடுபடும் தலித் மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்தே ரோஹித் வெமுலா உள்ளிட்டவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்தும், விடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனி டையே, ஞாயிற்றுக்கிழமை மாலை ரோஹித் வெமுலா விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனால், மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். ரோஹித் தற்கொலைக்கு அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ் ஆகியோர் காரணம் என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
மாணவர்களின் புகார் அடிப்படை யில், தற்கொலைக்கு தூண்டு தல், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பாராவ், மேலவை உறுப்பினர் ராமச்சந்திர ராவ், மாண வர்கள் சுஷீல் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் மீது கச்சிபவுலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மிருதி இரானியின் அலுவலகம் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கைக்காக காத்திருக் கிறேன். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவில்லை” என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர் அப்பாராவ் கூறும் போது, “பெரும்பான்மை மாண வர்கள், பல்கலைக்கழக நிர்வாகம், பேராசிரியர்கள் விரும்பினால் பதவி விலகத் தயார். நான் இவ்விவகாரத் தில் தலையிடுவதற்கு முன்பே, தலித் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. தண்டனைக் குறைப்புக்காக பேராசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்” என தெரிவித்துள்ளார்.
பண்டாரு தத்தாத்ரேயா கூறும் போது, “பல்கலைக்கழகத்தில் சமூகம், தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்றுவந்தன. ஏபிவிபி இயக் கத்தினர் தாக்கப்பட்டனர். ஏபிவிபி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை, மனித வளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தேன். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என எனக்குத் தெரியாது. இவ்விஷயத் தில் பாஜகவுக்கு தொடர்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.