பாகிஸ்தானை நம்பாதீர்: மோடிக்கு சிவசேனா எச்சரிக்கை

பாகிஸ்தானை நம்பாதீர்: மோடிக்கு சிவசேனா எச்சரிக்கை
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானை பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் நம்ப வேண்டாம் என சிவசேனா எச்சரித்துள்ளது.

சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில், "பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதான்கோட் விமானப் படை தளத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் மூலம் இந்திய எல்லைகள் பாதுகாப்பற்றதாக இருப்பது அம்பலமாகியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

இத்தகைய சூழலில், பிரதமர் மோடி உலக அமைதிக்காக பாடுபடுவதைவிட உள்நாட்டு பாதுகாப்பு மீது கவனம் செலுத்துவது நல்லது.

நவாஸ் ஷெரீப்புடன் ஒரு கோப்பை தேநீர் அருந்தியதற்கு பதிலடியாக நமது பாதுகாப்பு வீரர்கள் 7 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். எனவே, தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்ற அன்றைக்கே நாங்கள் அவரை எச்சரித்தோம். பாகிஸ்தான் இன்று நம்பிக்கை துரோகத்தின் மூலம் தனது நிலையை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

இந்தியாவுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருந்திருந்தால் இதற்குள்ளாக ஜெய்ஷ் இ மவுலானா அமைப்பின் தலைவர் மசூத் அசாரை அந்நாடு நம்மிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய சம்பவம் நடந்திருந்தால் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என பாஜக குரல் எழுப்பியிருக்கும். ஆனால், பாஜக இப்போது எந்த மாதிரியான பதிலடியை பாகிஸ்தானுக்கு கொடுத்திருக்கிறது என்பது கேள்விக்குறி.

பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்காமல் வரும் குடியரசு தின விழாவில் நமது ராணுவ தளவாடங்களை அணிவகுக்கச் செய்து பெருமை கொள்வதில் பயனில்லை" எனக் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in